பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் கோத்தபாய-மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு ,தமது முதல் இலக்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மிக இலகுவாக நிறைவேற்றிவிடலாமென்ற நினைப்பில் அவசர,அவசரமாக அதனை தம் விருப்பப்படி தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இப்போது அந்த 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களுக்கு வரும் எதிர்ப்புக்களையும் தவறுகளையும் பார்த்து ”ஆப்பிழுத்தகுரங்கின்” நிலையில் தடுமாறுகின்றது.
இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் தமது அரசை பலப்படுத்தும் விதத்திலும் தமது பதவிகளை தக்கவைக்கும் ,நீடிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது. அதிலும் ராஜபக்ச குடும்பம் இலங்கையில் ஆட்சி பீடமேறிய காலத்தின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மிகக் குறுகிய காலத்தினுள் மேற்கொள்ளப்படுகின்றன.அதில் ஒன்றுதான் 18 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் . அவர்களின் குடும்பத்தையும் பதவிக்காலங்களையும் பாதுகாக்கும்வகையிலேயே மேற்கொள்ளப்பட்டாலும் அவர்களின் அரசிலுள்ள பெரும் பான்மைப்பலத்தால் அத் திருத்தங்களை இலகுவில் நிறைவேற்றினர்.
எனினும் அடுத்து ஆட்சிபீடமேறிய ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கம் அவர்களுக்கு முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தைமீண்டும் திருத்தியது .18ஆவது திருத்தம் ஜனாதிபதி பதவியை 2 முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற தடையை நீக்கியது. மேலும், அதிகாரங்களை ஜனாதிபதியின் கைகளில் குவித்தது. அதை திரும்பப் பெறுவதே இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2015 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக நின்ற சிறிசேனா அளித்த தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.
அதற்கமைய மைத்திரி -ரணில் அரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்ததாகும். அது 1978 அரசியலமைப்பில் இருந்த ஜனாதிபதி பதவியை 2 முறை மட்டுமே வகிக்காலம் என்பதை மீண்டும் கொண்டுவந்தது. ஜனாதிபதி வேட்பாளருக்கு குறைந்தபட்ச வயது 35 வயது என்றும் மேலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் போட்டியிட முடியாது என தடை செய்தது.அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ராஜபக்ச குடும்பத்தை இலக்காகக் கொண்டிருந்தன. முதலாவது மஹிந்தா ராஜபக்ச ஏற்கனவே 2 முறை ஜனாதிபதி பதவியை வகித்தவர். இரண்டாவது இலக்கு அவருடைய மகன் நாமல், மூன்றாவது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. மேலும், அது 1978 அரசியலமைப்பில் வகுக்கப்பட்ட ஜனாதிபதி பதவிக் காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகக் குறைத்தது.பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஜனாதிபதி இழந்தார். இது அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையிலும் உச்சவரம்பைக் கொண்டுவந்தது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தேர்தல் ஆணையம், தேசிய பொலிஸ் ஆணைக்குழு , மனித உரிமைகள் ஆணையம், நிதி ஆணைக்குழு, பொது சேவைஆணைக்குழு உள்ளிட்ட 9 ஆணைக்குழுக்களின் நியமனங்களை அரசியலமைப்பு சபைகளுக்கு இடையே பரவலாக்கியது.இந்த அரசியலமைப்பு சபை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், சபைக்கு சிவில் சமூக பிரதிநிதித்துவமும் இருந்தது. இது 19ஆவது திருத்தத்தின் மிகவும் முற்போக்கான பகுதிகளில் ஒன்றாகக் காணப்பட்டது
இந்த நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ,தான் ஜனாதிபதியானால் நாட்டுக்கு பாதகமான 19 ஆவது அரசியலமைப்பை ஒழிப்பதே முதல் வேலை என்றே பிரசாரம் செய்து பெரு வெற்றியும் பெற்றார். அதேவழியிலேயே அவரின் சகோதரர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியும் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலில் 19 ஆவது அரசியலமைப்பை ஒழிப்பதே முதல் வேலை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து சிங்கள மக்களின் 2/3 ஆணையைக் கேட்டது. சிங்கள மக்களும் அதனை வழங்கினர்.
இந்த நிலையிலேயே அந்த 19 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்து 20ஆவது அரசியலமைப்பு திருத்ததை கொண்டு வர , தற்போதைய கோத்தபாய ராஜபக்ச-மகிந்த ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுத்து 20ஆவது அரசியலமைப்புத்திருத்தம் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே அதிலுள்ள திருத்தங்கள் தொடர்பில் தமிழ்,முஸ்லிம் கட்சிகள்,மக்கள் , சிங்கள எதிர்க்கட்சிகள் , சிங்கள ஜனநாயக வாதிகள் மட்டுமன்றி பொதுஜன பெரமுன அரசிலுள்ளவர்களே எதிர்க்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
இந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில் இருந்த 10 பேரைக்கொண்ட அரசியல்யாப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை அமைக்கப்படவுள்ளது.
19ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பு பேரவையில் பத்து அங்கத்தவர்கள் இருந்தபோதும் புதிய பாராளுமன்ற பேரவை ஐந்து அங்கத்தவர்களைக்கொண்டதாக மாத்திரமே இருக்கும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி ஆகியோரே புதியபாராளுமன்ற பேரவையின் ஐந்து அங்கத்தவர்களாக இடம்பெறுவர்.
அரசியலமைப்பு பேரவையில் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பேரவையில் இவர்கள் இடம்பெறமாட்டார்கள்.20ஆவது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20 ஆவது திருத்தத்தில் அது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் 20 ஆவது திருத்தத்தில் திருத்தப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளது.நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35-இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. ஆனால், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று , பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறை 20 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்தில் அதிகபட்சமாக 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து 20ஆவது திருத்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சரவைத் தலைவருக்கு [ஜனாதிபதிக்கு]வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எந்த அமைச்சையும் தன்வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19ஆவது திருத்தச் சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி எத்தனை அமைச்சு பொறுப்புக்களையும் கொண்டிருக்க முடிவதுடன் நிறுவனங்களையும் தமது நிருவாகத்தின் கீழ் கொண்டிருக்கலாம்.சட்ட மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக் கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதியிடம் மீண்டும் குவித்துள்ள வகையிலேயே இந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தற்போது கடுமையான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் கோத்தபாய -மஹிந்த அரசுக்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்களைக்குவித்துள்ள இந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவது ஒன்றும் கடினமான விடயமல்ல. ஆனால் இந்த திருத்தத்திற்கு தமது கட்சிக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைகளும் எதிர்ப்புக்களும் மற்றும் தாம் ஆட்சிபீடம்ஏற ஆதரவளித்த அமைப்புக்கள் கூட இந்த திருத்தத்தை எதிர்ப்பதுவுமே தற்போது கோத்தபாய -மஹிந்த அரசை தடுமாற வைத்துள்ளது. இந்த நிலையிலேயே புதிய 20 ஆவது திருத்தம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படுமென அறிவிக்க வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டது.
ஆனாலும் அவ்வாறு செய்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசுக்கு அது பெரும் இழுக்கை ஏற்படுத்திவிடுமென சில பேரினவாத சித்தாந்தத்தை மட்டும் கொண்ட அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை உசுப்பிவிடவே அவரும் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது அரசியல மைப்புத்திருத்தம் தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அப்போது இடம்பெறும் அது தொடர்பான குழுநிலை விவாதத்தில் தவறுகள், திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தலாம் எனக்கூறிவிட்டார்.
ஆனால் தவறுகளுடன், கடும் எதிர்ப்புகளுடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்க்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் குழு நிலை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு விவாதத்திற்குட்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே வெளியிடப்பட்ட 20 ஆதி திருத்தத்துக்கும் விவாதங்களின் பின்னர் மாற்றப்படும் 20 ஆவது திருத்தத்துக்கு இடையில் அதிக வேறுபாடுகள் இருக்குமானால் அதுவும் அரசுக்கு புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதனைக்கவனத்தில் கொள்ளாமலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்றே தெரிகின்றது.
இதேவேளை 20 ஆதி அரசியலமைப்புத்திருத்தத்தில் உள்ள விடயங்கள் மட்டுமன்றி இந்த திருத்தங்களை தயாரித்தவர்கள் யார் என்பது தொடர்பிலும் குழப்ப நிலையுள்ளது. எதிர்க்கட்சிகளின் இது தொடர்பான கேள்விக்கு ”20ஆவது திருத்தத்தைத் நான் தயாரிக்கவில்லை.எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. எனினும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் அதற்கான பொறுப்பைஏற்கிறேன்” என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் வழங்கிய பதிலும் ”இதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்” என்ற ஜனாதிபதியின் அறிவிப்பும் இந்த 20 ஆவது திருத்த விடயத்தில் மறை கரம் ஒன்று செயற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகின்றது.
இதேவேளை அரச தகவல் திணைக்களத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன ஆகியோர்,சட்ட வரைபு திணைக்களமே 20 ஆவது திருத்த வரைபை தயாரித்தது. ஜனாதிபதி, நீதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் அனுமதியுடன் சட்ட வரைபு திணைக்களமே 20 ஆவது திருத்த வரைபை தயாரித்தது எனக்கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் ஜனாதிபதித்தேர்தலில் தனது வெற்றிக்காக கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட .அவரின் தலைமையிலான ”வியத்மக”[சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள்] அமைப்பே இந்த 20 ஆவது திருத்தத்தை தயாரித்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.
கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்த ”வியத்மக” அமைப்பு கோத்தபாய ராஜபக்சவை மட்டுமே மனதில் வைத்து அவரை மட்டுமே பலப்படுத்த நினைத்து இந்த 20 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தை தயாரித்ததுதான் அவரின் அரசுக்குள்ளேயே இதற்கான எதிர்ப்புக்கள், காய் நகர்த்தல்கள் ,குழிபறிப்புக்கள் இடம்பெறக்காரணம் என்றும் கூறப்படுகின்றது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே அவரின் அண்ணனான மஹிந்த ராஜபக்ச பிரதமரானார்.அப்போது ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச ” நான் அரச நிர்வாகத்தைப்பார்த்துக்கொள்வேன்.அண்ணன் மஹிந்த ரசியலைப் பார்த்துக் கொள்வார்” என்று கூறியிருந்தார். ஆனால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமோ கோத்தபாயவை மட்டும் மையப்படுத்தி இருப்பதே அது இன்று சிக்கலுக்குள்ளாகக் காரணமாக உள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதனால் நினைத்ததையெல்லாம் செய்து விடலாம் என்ற இறுமாப்பிலிருக்கும் கோத்தபாய-மஹிந்த அரசு தமது முதல் நகர்விலேயே தோல்வியை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. 13 ஆவது திருத்தம் ஒழிப்பு,20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் , புதிய அரசியலமைப்பு என்று அகலக்கால் வைத்த கோத்தபாய-மஹிந்த அரசு இன்று 13 ஆவது திருத்தத்தை ஒழிக்கும் எண்ண த்தைக் கைவிடும் நிலையிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்க எண்ணத்தை 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கும் நிலையிலும் 20 ஆவது திருத்தத்தில் அடுத்தது என்ன செய்வது என்ற தடுமாற்றத்திலுமே உள்ளது.
- தாயகன்