கொரோனா பெருந்தொற்று சூழலினால், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பயண முடக்கம், விசா பரிசீலணையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது.
தற்போதைய கணக்குப்படி, கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவின் 2019-20 நிதியாண்டில் 140,366 வெளிநாட்டினருக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, அரசு திட்டமிட்ட 160,000 என்னும் எண்ணிக்கையை விட குறைவானது. கடந்த பத்தாண்டின் சராசரியே 175,000 எண்ணிக்கையாக உள்ள நிலையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது.
சர்வதேச பயணத்திற்கு கொரோனா பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் லிஸ் அல்லென் தெரிவித்துள்ளார்.
நிரந்தர குடியேற்றம் என்பது திறனவாய்ந்த குடியேற்றம், குடும்ப வழியிலான குடியேற்றம், மற்றும் சில சிறப்பு விசாக்களை உள்ளடக்கியதாகும்.