தென்கொரியாவில் செய்யப்பட்ட முகக்கவசங்களை வடகொரியா திருப்பி அனுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “வடகொரியாவில் முகக்கவசத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனாவிலிருந்து வந்த முகக்கவசங்களை வடகொரியா திரும்ப அனுப்பியுள்ளது. அந்த முகக்கவசங்கள் அனைத்தும் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டதால் அவை திரும்ப அனுப்பப்பட்டதாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக, வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா நோயாளிகள் குறித்த எந்தப் பாதிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் கரோனா பரவல் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.