ஓய்வு மற்றும் திருமண முறிவு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியதாக அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார். 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக தொகுத்து சுயசரிதை புத்தகத்தை நேற்று (31) வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கிரிக்கெட் ஓய்வுக்குப் பின்னர் திருமண பந்தமும் முடிந்து போனதால் மது குடிக்கத் தொடங்கினேன். வேலையிலும் மனநிறைவு கிடைக்கவில்லை. இதனால், தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது.
ஒருநாள் போர்ட் பீச் பகுதியில் என் காரை நிறுத்தி விட்டு இருட்டில் நடந்து சென்றேன். கடலை வெறித்துப் பார்த்து ஒரு முடிவு (தற்கொலை) எடுத்தேன். கடல் அரிப்பு தடுப்பு கற்கள் வரை நீந்திச் செல்ல வேண்டும். திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
விதிப்படி நடக்கட்டும் என முடிவு செய்து நான்கு முறை நீந்திச் சென்றேன். ஒவ்வொரு முறையும் எதாவது கடினமாக செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போது, நினைப்பதும் அதை செய்வதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள் என்பது விளங்கியது. அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்து விட்டேன். இவ்வாறு ஹாக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஹாக் தனது 44-வது வயதில் விளையாடியபோது, ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வயதான வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போது 45 வயதாகும் ஹாக், பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.