மரணப்படுக்கையில் தந்தை… நான்கு பிள்ளைகளில் ஒருவருக்கு மட்டும் காண வாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலை தடுக்க இரண்டு மாகாணங்கள் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைகளால் ஒரு குடும்பம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

ஆனால், இரு மாகாணங்களுக்கு இடையேயான கடுமையான சட்டங்களால் தற்போது ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.

39 வயதான மார்க் கீன்ஸ் என்ற லொறி சாரதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிலை 4 மூளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், குயின்ஸ்லாந்து அதிகாரிகள் மார்க் கீன்ஸ் குடும்பத்தினரிடம் அவரது குழந்தைகளில் ஒருவரை மட்டுமே நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து இடையேயான எல்லையை கடக்க அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் குயின்ஸ்லாந்து அதிகாரிகளின் இந்த கடும்போக்கு நடவடிக்கைக்கு, மார்க் கீன்ஸ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையின் கடைசி நிமிடங்களில் பங்கேற்க நான்கு பிள்ளைகளில் ஒருவரை தெரிவு செய்வதே கடினமான பணி என கீன்சின் தந்தை கொந்தளித்துள்ளார்.

கீன்சின் பிள்ளைகள் நால்வரும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள். அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இரண்டு வார கால தனிமைப்படுத்தலுக்கு ஒப்புக்கொண்டாலும், இரண்டு முதியவர்களுக்கும் இரண்டு சிறார்களுக்கும் என மொத்தம் 4,620 டொலர் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இருப்பினும் மார்க் கீன்ஸ் குடும்பத்தாரின் கோரிக்கையை குயின்ஸ்லாந்து நிர்வாகம் கருத்தில் கொள்ளவே மறுப்பதாக கூறப்படுகிறது.