உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவலைத் தரமுன் தொடர்பை துண்டித்த நிலந்த

கடந்த 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவிடமிருந்து தான் தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றதாகவும் அது சர்வதேச தீவிரவாதிகளின் ஒருங்கிணைந்த உடனடி பயங்கரவாத தாக்குதல் குறித்த நம்பகமான தகவல் பற்றியதாகும். ஆனால் மேலதிக தகவல்களை அவர் வழங்காது உரையாடலின் நடுவே தொலைபேசித் தொடர்பை துண்டித்ததாகவும் தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் தலைவர் (சின்ஐ) சிசிர மெண்டிஸ் கடந்த செப்டெம்பர் 15இல் இடம்பெற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் சிசிர மெண்டிஸ் மேலும் கூறியதாவது,

“நான் நள்ளிரவு உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த போது தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் பணிப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றேன். சர்வதேச புலனாய்வாளர்களிடமிருந்து ஒரு தகவலைப் அவர் பெற்றிருப்பதாக அவர் கூறினார். நான் அவரிடம் ஐஜிபி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால் நிலந்த ஜெயவர்த்தன உடனடியாக தொடர்பை துண்டித்ததுடன் அதன்பின் ஒருபோதும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.

மேலும் அவர், புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன 2019 ஏப்ரல் 19 அன்று காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பின் பின்னர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் குழுவினர் இதன் பின்னால் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.