வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசு பொலிஸாரின் ஊடாகச் செயற்படுத்தும் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள் குறித்து நேற்று பிற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.
இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது, இந்தக் கலந்துரையாடலில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறீதரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், பா.கஜதீபன், எஸ்.ஈசன், விந்தன் கனகரட்ணம், எஸ்.வேந்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.