இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார்.

அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ராஜபக்சக்கள் இந்தியாவுக்கான விசேஷ அந்தஸ்துடைய ஒரு தூதுவராக மிலிந்த மொரகொட வை  நியமித்து இருக்கிறார்கள். இவர் தேர்தலுக்கு முன்னரே 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்று கூறத் தொடங்கி விட்டார். மேலும், புதிய அமைச்சரவையில் மாகாணசபைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் அட்மிரல் வீரசேகர மகாண சபை முறைமையை ஏற்றுக் கொள்ளாதவர். எனவே இந்த இரண்டு நியமனங்களுக்கு ஊடாகவும் பார்த்தால் ராஜபக்சக்கள் 13 இல் கை வைப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அவ்வாறு அவர்கள் 13இல் கை வைத்தால் அதை இந்தியா தடுக்குமா?

கடந்த சுமார் 34 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா அதை எதிர்க்கும் என்று நம்பத்தக்க நிலைமைகள் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த அனுபவங்களை இங்கு சுருக்கமாக தொகுத்து பார்க்கலாம்.

பதின்மூன்றாவது திருத்தம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டது. இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இனப்பிரச்சினைக்கு தீர்வாக உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்ட போதிலும் அதில் இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய தரப்பாகிய தமிழர் தரப்பு கையெழுத்திடவில்லை. அப்படி என்றால் அதை எப்படி இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு என்று எடுத்துக் கொள்வது? இவ்வாறு தமிழர்களை ஒரு தரப்பாகக் கொள்ளாமல் இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதே யாப்பின் 13வது திருத்தம். அது மாகாண சபைகளை உருவாக்குவதற்கான திருத்தம் ஆகும்.

எனினும் இந்திய-இலங்கை உடன்படிக்கை எனப்படுவது பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் மட்டும் அல்ல அதற்கும் அப்பால் அந்த உடன்படிக்கையின் இதயமானது இரண்டு தலைவர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட கடிதங்களில் தான் இருக்கிறது என்று கூறுவோரும் உண்டு. அந்த உடன்படிக்கையின் பின்னிணைப்பாக அக் கடிதங்கள் காணப்படுகின்றன. அக்கடிதங்களின் பிரகாரம் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக எந்த ஒரு தரப்பும் இலங்கை தீவை பயன்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட காலம் கெடுபிடிப் போர் இருந்தது. கெடுபிடிப் போரின் இறுதிக் கட்டத்தில் எழுதப்பட்ட ஓர் உடன்படிக்கை. அது அரசுகளுக்கு இடையிலானது. எனவே அது நிரந்தரமானது என்று கூறுவோரும் உண்டு.

ஆனால் 2009-க்கு பின்னிருந்து இலங்கை தீவு வேகவேகமாக சீனமயப் பட்டு வருகின்றது. இதன் விளைவாக இப்பொழுது இச்சிறிய தீவின் வரைபடம் மாற்றப்பட்டு விட்டது. அதன் பாரம்பரிய அடையாளங்களுக்கு பதிலாக தாமரை மொட்டு கோபுரமே அதன் அடையாளமாக மாறியிருக்கிறது. அதாவது சீன மயமாதல் எனப்படுவது இலங்கைத்தீவின் வரைபடத்தையும் அதன் பாரம்பரிய அடையாளத்தையும் மாற்றி விட்டது. இச்சிறிய தீவின் வரலாற்றில் முன்னெப்போதும் இந்த அளவுக்கு சீனர்களின் பிரசன்னமும் செல்வாக்கும் காணப்பட்டது இல்லை.அப்படி என்றால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இது எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?

இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று இந்திய-இலங்கை உடன்படிக்கை காலாவதியாகி விட்டதா?  இரண்டாவது கேள்வி – சீனாவின் பிரசன்னத்தை  இந்தியா தனது நலன்களுக்கு பாதகமானதாகப் பார்க்கவில்லையா?

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் இதயமான பகுதி என்று வர்ணிக்கப்படும் கடிதங்களில் கூறப்பட்ட விடயங்களை மீறி இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டது. இத்தகைய பொருள்பட கூறின் இந்திய-இலங்கை உடன்படிக்கை காலாவதியாகி விட்டது என்று கூறலாமா? இன்னும் கூர்மையாகச் சொன்னால் அந்த உடன்படிக்கையின் ஒரே மிஞ்சியிருக்கும் உயிருள்ள எச்சம் அல்லது பதாங்க உறுப்பு  மாகாணசபைகள் தான் எனலாமா? இது முதலாவது.

இரண்டாவது அந்த உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை இன்று வரையிலும் அதன் முழுமையான அதிகாரங்களை பெறவில்லை. அதற்குப் பின் தொடர்ச்சியாக வந்த எந்தவொரு அரசாங்கமும் மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கவில்லை. முதலாவது வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாள் ஒரு முறை சொன்னார் இந்திய மாநில கட்டமைப்பை ஒத்த ஒரு மாகாண கட்டமைப்புதான் 13ஆவது திருத்தத்தில் உள்ளது என்று. ஆனால் நடைமுறை அப்படியல்ல. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மாகாணத்திலிருந்து அதிகாரங்களை எடுத்துக்கொண்டன. அதுமட்டுமல்ல உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களையும் கூட அதாவது காணி பொலிஸ் அதிகாரங்களை அவர்கள் மாகாணத்துக்கு வழங்கவே இல்லை.

அதிலும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயத்தின் முடிவில் இந்தியாவில் வைத்து ஆணித்தரமாகச் சொன்னார் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க போவதில்லை என்று. இந்தியா அதைக் குறித்து கருத்து எதையும் கூறவில்லை. இவ்வாறு உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களையும் கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் நிறைவேற்ற தவறியமை குறித்து இந்தியா  இலங்கை அரசாங்கங்களின் மீது  எப்போதாவது ஏதாவது அழுத்தங்களை பிரயோகித்திருக்கிறதா?

ஏன் பிரயோகிக்கவில்லை? இந்தியாவும் சேர்ந்து மாகாணக்  கட்டமைப்பை கைவிட்டு விட்டதா? இத்தகைய பொருள்படக் கேட்டால் இந்திய-இலங்கை உடன்படிக்கை காலாவதியாகி விட்டதா?

மூன்றாவது கணேசலிங்கம் சுட்டிக்காட்டியது. வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி ஒரு வழக்கு தொடுத்து பிரித்த போது அதையும் இந்தியா தடுக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட போது அமரர் ராஜீவ் காந்தி தமிழ் தலைவர்களுக்கு ஓர் உத்தரவாதத்தை வழங்கினார். இப்போதைக்கு அவை தற்காலிகமாக இணைக்கப்பட்டு பின்னாளில் அவை நிரந்தரமாக இணைக்கப்படும் என்று. ஆனால் இப்பொழுது ராஜீவ் காந்தியும் இல்லை வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை. இத்தகைய பொருள்படக் கூறின் இந்திய-இலங்கை உடன்படிக்கை காலாவதியாகி விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?

எனவே மேற் கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் இனி வரும் காலங்களிலும் ராஜபக்ஷவின் அரசாங்கம் 13 ஆவதை நீக்கும் நடவடிக்கைகளை எடுத்தால் அதை இந்தியா தடுக்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது? கொழும்பிலிருக்கும் இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இது விடயத்தில் இந்திய தூதுவர் பதின்மூன்றாவது திருத்தம் நீக்கப்படுவதற்கு ஆதரவாக இருக்க மாட்டார் என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் விமல் வீரவன்சவும் வீரசேகரவும் அதற்கு எதிராகப் பதில் கூறி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் புதிய யாப்பு என்று ஒன்று உருவாக்கப் படுமாக இருந்தால் அதில் 13 இல் உள்ள அம்சங்கள் நீக்கப்படுமா ? என்ற சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.

இங்கு முக்கியமாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் பதின்மூன்றாவது திருத்தம் என்று கருதப்படுவது இனப்பிரச்சினைக்கான தீர்வைத்தான்.இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இப்போதுள்ள யாப்பு 13ஆவது தடவையாக திருத்தபட்டது. ஒரு புதிய யாப்பில் திருத்தங்கள் இருக்காது அது இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று பார்த்தால் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை அதில் ராஜபக்சக்கள் முன்வைக்க வேண்டி இருக்கும். அதற்க்குரிய நிலைமைகள் உண்டா? ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பது 19ஆவது திருத்தத்தைப்  பலவீனமாகி 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதைப் போன்றது அல்ல. ஒரு புதிய யாப்பை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் மட்டும் உருவாக்கிவிட முடியாது. அதை பொதுசன வாக்கெடுப்புக்கு விட வேண்டியிருக்கும். தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பைக் காட்டும் நிலைமைகளும் இருக்கும். எனவே ராஜபக்சக்கள் இது விடயத்தில் ரிஸ்க் எடுப்பார்களா? அல்லது இப்போது இருக்கும் நிலைமையை தொடர்வதன் மூலம் சமாளித்துக் கொண்டு போகப் பார்ப்பார்களா?

20ஆவது திருத்தத்தின் பிரகாரம் அவர்களுக்கு உரிய அதிகாரம் கிடைத்து விடும். வம்ச ஆட்சிக்கு இருந்த தடைகள் நீங்கி விடும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டிய தேவை இருக்காது. தமிழ் தரப்பிலிருந்து கூர்மையான எதிர்ப்பு எதுவும் காட்டப்படாத வரை அவர்கள் அதைப்பற்றி யோசிக்க தேவையில்லை. அவ்வாறு காட்டக்கூடிய எதிர்ப்புக்களையும் புலிகளை மீள உருவாக்குகிறார்கள் என்று கூறி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கையாளலாம் என்ற நிலைமை உள்ளவரை அவர்கள் இது விடயத்தில் அக்கறை காட்ட மாட்டார்கள்.

பதிலாக இப்போது இருக்கும் கோறை ஆக்கப்பட்ட 13ஐத் தொடரலாம். அதுதான் அவர்களுக்கும் வசதியானது. ஏனெனில் காணி பொலிஸ் அதிகாரம் அற்ற பலவீனமான ஒரு மாகாண கட்டமைப்பை அப்படியே விடும்போது சர்ச்சைகளும் வராது. இந்தியாவோடு பிரச்சினை ஏற்பட வேண்டியும் வராது.

இதற்கு தேவையான கெட்ட முன்னுதாரணத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே காட்டியிருக்கிறார். அதன்படி நிலைமாறுகால நீதியை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக கூறிக்கொண்டே காலத்தைக் கடத்தலாம். மேலும் கால அவகாசத்தை கேட்கலாம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை யத்தை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் மன்னாரில் பியர் துறைமுகத்தை நிர்மாணிக்கும் பணிகள் போன்றவற்றை இந்தியாவுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் இந்தியாவை சமாளிக்க எத்தனிப்பார்கள்.

கோவிட்-19க்கு பின்னரான துருவ மயப்படும் உலகச் சூழலானது  ராஜபக்சக்களை சீனாவின் செல்வாக்கு வலையத்துக்கு வெளியில் எடுக்க வேண்டிய ஒரு நிலைமையை ஏற்படுத்தினால் இந்தியாவும் உட்பட ஏனைய வெளித் தரப்புக்கள் தமிழ்த் தரப்பை கையாள்வது பற்றி சிந்திக்கக் கூடும். அது வரையிலும் ரணில் விக்ரமசிங்க காட்டிய வழியிலேயே ராஜபக்சக்களும் பயணிப்பார்களா ?

நிலாந்தன்