செய்தியாளர்கள் சட்டத்தைத் தவிர்த்தனர் என்ற சீனாவின் குறைகூறலை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்தியாளர்கள் இருவர் தூதரகப் பாதுகாப்போடு வந்ததை அடுத்து, அவர்கள் மீதான சீன விசாரணையைத் தடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

தனது தூதரக அதிகாரிகள் முறையாக நடந்துகொண்டார்கள் என்றும் அது குறிப்பிட்டது.

செய்தியாளர்கள் பில் பிர்டல்ஸ் (Bill Birtles), மைக் ஸ்மித் (Mike Smith) இருவரும் சீனாவின் விசாரணையைத் தவிர்க்க, ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் உதவியதாக பெய்ச்சிங் கூறியது.

அதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர், அவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேற சீனா ஒப்புக்கொண்டதாகச் சொன்னார்.

சீனாவின் காவல்துறை அதிகாரிகள் அவர்களை விசாரிக்கப்போவதாகக் கூறிய பின், பிர்டல்ஸும் ஸ்மித்தும் ஆஸ்திரேலியத் தூதரகத்தில் அடைக்கலம் தேடினர்.

செய்தியாளர்கள் இருவரும் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு முன், காவல்துறையால் விசாரிக்கப்படுவதற்கு இரு நாடுகளும் இணங்கின.

அதை அடுத்து, இருவரும் இந்த வாரத் தொடக்கத்தில், சீனாவை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், ஆஸ்திரேலியா சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதாகச் சீனா குறைகூறியது.

செய்தியாளர்கள் இருவரும், சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியக் குடியுரிமை கொண்ட Cheng Lei தொடர்பாக விசாரிக்கப்பட்டனர்.