ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வார்னோ. ஐபிஎல் அறிமுகம் தொடரில் இவரது தலைமையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வருடமும் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இரண்டு பணியுடன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ், என்னுடைய அணி, என்னுடைய குடும்பத்திற்கு திரும்பியது சிறந்த உணர்வாக கருதுகிறேன். அனைத்து விசயங்களிலும் அணியுடன் இணைந்து வேலை செய்வது உற்சாகமாக உள்ளது. அதை நான் விரும்புகிறேன்.
உலகளாவிய அணி என்ற திட்டத்தை நோக்கி நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் விரும்ப வேண்டும். எங்களை பின்தொடர் வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். இந்த சீசனில் அணி ஆலோசகராக பணியாற்ற இருக்கிறேன். எங்களால் இந்த முறை வெற்றிகரமான தொடராக முடிக்க முடியுயும் என நம்புகிறோம். வரும் மாதங்களில் சாதனைப் படைப்பது பெரிய நினைப்பாக இருக்கும்’’ என்றார்.