அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிர்ப்பு

அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும் லெக்கின்சில், இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதற்கு இந்துக்கள் தரப்பில் கண்டனமும், அதிருப்தியும் எழுந்துள்ளது. மேலும், இவ்வாறான லெக்கின்ஸ்களை அந்நிறுவனம் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆயத்த ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதில் சில வெளிநாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கோருவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த வகையில், அவுஸ்ரேலியாவில் உள்ள ‛ரெட் பபுள்‛ என்ற ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும் லெக்கின்சில் சிவன், விஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், வினாயகர், துர்க்கை, லட்சுமி, முருகன், சரஸ்வதி, அனுமன், காளி உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்ட லெக்கின்ஸ்களை சமீபத்தில் விற்பனைக்கு விட்டுள்ளது.

இதற்கு இந்துக்கள் தரப்பில் கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்சல் சொசைட்டி ஆப் இந்துயிசம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛உலகின் மிகப் பழமையான இந்து மதத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயலில் ரெட்பபுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது இந்துக்களை புண்படுத்தி உள்ளது. எனவே, ரெட் பபுள் நிறுவனம் மன்னிப்பு கேட்பதுடன், இந்து கடவுள்களின் படங்களோடு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள அனைத்து லெக்கின்ஸ்களையும் வாபஸ் பெற வேண்டும்,’ என்று கூறி உள்ளார்.