ஆஸ்திரேலியா அரசு மீண்டும் அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகளை மூடிய ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழைய கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சலின் கணக்குப்படி, மனிதாபிமான விசாக்கள் பெற்ற சுமார் 4,000 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாமல் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள டேவிட் ஓதீஷ் எனும் ஈராக்கிய அகதியின் சகோதரிக்கும் அவரது குடும்பத்துக்கும் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மனிதாபிமான விசாக்கள் கிடைத்த போதிலும் இதுவரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை நிலவி வருகின்றது.
வடக்கு ஈராக் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஆதிக்கம் பெற்றிருந்த பொழுது, அங்கிருந்து தப்பிய இக்குடும்பம் தற்போது லெபனானில் வசித்து வருகின்றது.
லெபனானில் ஒரு சிறு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வரும் டேவிட்- ன் சகோதரி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்குமாறு மன்றாடி வருகிறார்.
“ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பதற்கான அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்று சூழல் அனைத்தையும் நிறுத்திவிட்டது. ஆஸ்திரேலிய அரசு எங்களது குரலைக் கேட்கும் என நம்புகிறோம்,” என ஈராக்கிய அகதியான டேவிட் தெரிவித்திருக்கிறார்.
வரும் 2021 வரை ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய சிறப்பு அனுமதிக் கோரி இக்குடும்பம் விண்ணப்பித்த போதிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லைளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவலை குறைப்பதாக ஆஸ்திரேலிய உள்துறை தெரிவிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal