ஈழ தமிழ் மக்களின் தலைவிதி இருட்டில் இருந்த சந்தர்ப்பதில் எமது நிலையை விளக்கி ஆதரவை கேட்ட போது முழுமையான ஆதரவை வழங்கியதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு எப்போதும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவளித்துள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தல் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தொண்டமான் குடும்பம் மலைநாட்டு தமிழ் மக்களை பிரிதிநிதிப்படுத்தியுள்ளது. மலைநாட்டு தமிழ் மக்கள் கடந்த பல தசாப்த காலமாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்துள்ளனர்.
நாட்டில் சுதந்திரத்திற்கு பின்னரான அரைவாசிக் காலத்தில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த சமூகமே திகழ்ந்துள்ளது. இரத்தம், கண்ணீர், வியர்வையை மலையக மக்கள் நாட்டுக்காக சிந்தியுள்ள போதும் இந்த நாடு தொடர்ந்து அந்த மக்களை வித்தியாசமாகதான் பார்த்து வந்துள்ளது.
மலைநாட்டை பிரிதிநிதித்துவப்படும் கட்சிகள் இன்றும் தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என போராடுகின்றனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான், தொழிற்சங்க ரீதியில் மாத்திரமின்றி இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் மதிப்பையும் பெற்றிருந்தார்.
அவரின் பணியை ஆறுமுகன் தொண்டமான் அமைதியாக முன்னெடுத்தார். நான் 2001ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தர்ப்பதில் பல தடவைகள் அவரை சந்தித்துள்ளேன். ஈழ தமிழ் மக்களின் தலைவிதி இருட்டில் இருந்த சந்தர்ப்பதில் அவர் அமைச்சராக இருந்தார். அவருக்கு எமது நிலையை விளக்கி ஆதரவை கேட்ட போது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்.
பேசுவது மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளுக்காக அமைதியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் செயற்பட்டிருந்தார். மலையகத்தில் பல கட்சிகள் இன்றுள்ளன. ஆறுமுகன் தொண்டமானுக்கும் இந்த கட்சிகளின் கருத்துகளுக்கும் வேறுபாடுகள் உள்ள போதிலும் தமது மக்களுக்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்மை குறித்து எவருக்கும் விமர்சனம் இல்லை. ஈழ போராட்டத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என சிலர் கூறுகின்றனர். தவறாகும். 1972ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட போது சௌமியமூர்த்தி தொண்டமான் அதன் இணைத் தலைவராக இருந்தார்.
பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்தார். ; வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது மலையக மக்களின் எதிர்காலம் அந்த வழியில் இல்லையென அவர் விலகியிருந்தார்.
ஆனால் எந்த வழியிலும் அவர் ஈழ போராட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு அவரும் ஆறுமுகன் தொண்டமானும் எப்போதும் ஆதரவளித்துள்ளனர். நாட்டின் சூழ்நிலை காரணமாக அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாது போனது. அதற்காக வருந்துகிறோம் எனவும் அவர் கூறினார்.