“தமிழ் தலைவர்களின் செயல்பாடுகளில் தடைகள், தாமதங்கள் இருப்பது என்பது உண்மைதான் இருந்தபோதும் தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை. அது வெற்றிக்கான படிகளை தாண்டுவதற்கு இன்னும் பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அதற்கு தமிழ் இளைஞர்கள் சலுகை அரசியலுக்கு சோரம் போகாமல் எமது கடந்த கால வரலாறுகளையும் போராட்ட தியாக இழப்புகளையும் கேட்டறிந்து உண்மையான தமிழ் இளைஞர்களாக மாறும்போது தமிழ்தேசியம் பல வீச்சுக்களுடன் முன்னேறும்” என இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் அளித்த செவ்வியில் கூறினார். அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,
கேள்வி :- தமிழர் தாயகம் சிறிய சிறிய துண்டுகளாக பிளவுபட்டு பலம் இழக்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் :- தமிழர் தாயகம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீக நிலம், இது கடந்த 1833 ஆம் ஆண்டு 25500 சதுர கிலோ மீற்றர் விஷ்தீரணம் கொண்டிருந்தது. படிப்படியாக சிங்கள குடியிருப்பு ஆக்கிரமிப்பினால் 1976, ஆம் ஆண்டு அதாவது தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படும்போது வடகிழக்கு தாயகம் ஏறக்குறைய 15000 சதுர கிலோமீற்றர் விஷ்தீரணமாக இருந்தது, அதன்பின்பு 2010, ஆம் ஆண்டில் அது இன்னும் துண்டாடப்பட்டு ஏறக்குறைய 11500 சதுர கிலோமீற்றர் விஷ்தீரணமாக குறுகியுள்ளது 2020 இல் இன்னும் விஷ்தீரணம் குறைந்துள்ளது என நான் நினைக்கிறேன். ஏறக்குறைய 10000 சதுர கிலோமீற்றராக இது மாறியிருக்கும் என்பதே எனது கணிப்பு. இதற்கான காரணம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தமிழ் இனத்தின் இனவிகிதாசார குறைவு, இடப்பெயர்வு, இராணுவ அத்துமீறல், நில அபகரிப்பு என பல சதி நடவடிக்கைகளால் தமிழர் தாயகம் குறுகியுள்ளது. அவ்வாறு குறைந்தாலும் எமது மொழி, நிலம் எமது இனத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் அனைவரும் அபிவிருத்தி சலுகை அரசியல் சிந்தனையில் இருந்து சுயநிர்ணய உரிமை அரசியல் சிந்தனையின் உண்மையை உணர்ந்து தமிழ்தேசிய அரசியல் செயல்பாட்டாளர்களாக அனைவரும் மாற வேண்டும், சர்வதேசத்தின் நீதிக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
கேள்வி :- தமிழ்த் தேசியம் குற்றியிராவதற்கு தமிழ் தலைவர்கள் தானே பின்னணியானவர்கள் ?
பதில் :- தமிழ்தேசியம் குற்றுயிரானது என்பதை ஏற்கமாட்டேன். தமிழ் தேசிய அரசியல், இலங்கையிலுள்ள சிங்கள பெரும் தேசியவாதத்திற்கு முகம் கொடுத்து பல்வேறு உயிர் இழப்புகளையும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொண்ட அரசியல். தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான அரசியல் இதன் வயது 73 ஐ தாண்டிவிட்டது. தற்போது இலங்கையை கடந்து சர்வதேசம் நோக்கி தமிழ்தேசிய அரசியல் விரிந்துள்ளது. இது குறுகி இருந்தால் இலங்கைக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் இதன் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கையில் இனவாத சிங்கள தலைமைகளுக்கு முகம் கொடுத்து தமிழ்தேசிய அரசியலை வெற்றிகாண்பது என்பது கல்லில் நார் உரிக்கும் செயலாகும்.
தமிழ்தலைவர்களின் செயல்பாடுகளில் தடைகள், தாமதங்கள் இருப்பது என்பது உண்மைதான் இருந்தபோதும் தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை அது வெற்றிக்கான படிகளை தாண்டுவதற்கு இன்னும் பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அதற்கு தமிழ் இளைஞர்கள் சலுகை அரசியலுக்கு சோரம் போகாமல் எமது கடந்த கால வரலாறுகளையும் போராட்ட தியாக இழப்புகளையும் கேட்டறிந்து உண்மையான தமிழ் இளைஞர்களாக மாறும்போது தமிழ்தேசியம் பல வீச்சுக்களுடன் முன்னேறும்.
கேள்வி :- மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தமைக்காக அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுவது ஆரோக்கியமானதா ?
பதில் :- அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தாலும் அரசாங்கம் செய்வதை எல்லாம் கேட்டு கிளிப்பிள்ளை அரசியல் செய்வதற்கு அதில் உள்ள அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் தயாராக இருப்பார்களா என்பது கேள்விதான். இருந்தாலும் சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சாதகமாக பயன்படுத்துவார்களானால் அதன் ஆபத்தை சர்வதேச சமூகம் முன் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு தயங்காது, அதன் சில ஏற்பாடுகளை எமது தலைவர் சம்பந்தன் ஐயா தற்போது அமெரிக்க, இந்திய தூதுவர்களை சந்தித்த போது தேர்தலுக்கு பின்னரான காலத்தில் நேரடியாக கதைத்துள்ளார் என்பது உண்மை. ஆணவம் கொண்டு செயல்படும் அரசு அழிவை நோக்கி செல்லும், பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி :- உரிமையோடு சார்ந்த அபிவிருத்தியினை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கட்டியெழுப்புவதென்பது சாத்தியமானதா ?
பதில் :- உரிமை என்பது வேறு அபிவிருத்தி என்பது வேறு, தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை என்பது கடந்த 73, வருடங்களாக அடிமைகளாக வாழும் தமிழ்பேசும் மக்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளுடனும் எமது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் எமது பொருளாதார அபிவிருத்திகளை நாமே திட்டமிட்டு நாமே தீர்மானித்து அதை சுதந்திரமாக தடைகள் இன்றி மேற்கொள்ள வேண்டிய உரிமை கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதாவது எங்களை நாங்களே ஆட்சி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் நிர்வாக அலகு இதைத்தான் கேட்கிறோம். அதை அடைவது முதல் தேவை. அதை அடையும் வரை எமது மக்களுக்கான வாழ்வாதார அடிப்படை வசதி வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சிகளை பெறுவதுதான் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, உண்மையில் பரிபூரண அபிவிருத்தி என்பது தமிழ்தேசிய கொள்கை வெற்றிபெற்றால் அது தானகவே எமது கைகளுக்கு வரும். அதை அடைவதற்கான அரசியலே தமிழ்தேசிய அரசியலின் அடிப்படை நோக்கம்.
சிலர் அபிவிருத்தி என்பதற்கு வழங்கும் வியாக்கியானம் வரிப்பணத்தில் அரசாங்கம் ஒதுக்கும் உள்கட்டுமான பணிகளையே. இவைகள் உண்மையான அபிவிருத்தி இல்லை இது தற்காலிக அடிப்படை தேவைகளை கேட்டுபெறுவது. ஒரு நாட்டை ஆட்சிசெய்யும் அரசு அந்த மக்களின் வரிப்பணத்தின் மூலம் அந்த பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டியது அரசின் கடமை இது அபிவிருத்தியல்ல அரசின் மக்கள் வரிப்பணத்தின் பங்கீடுகள். இதற்கு யார் அமைச்சர்களாக இருந்தாலும் யார் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டாலும் செய்ய வேண்டிய அடிப்படை கடமை. உண்மையான அபிவிருத்தி என்பது எமது நிலத்தில் நாங்களே தீர்மானித்து எந்த இடத்தில் எதை செய்யவேண்டும், எப்படி வாழ்வாதாரத்துக்கு எமது மக்கள் தீர்மானித்து செயல்படவேண்டும் இதற்கான நிதிகளை நேரடியாக தடைகள் இன்றி வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கான உரிமை என்பன எமது கைகளில் வரவேண்டும் அதுதான் சலுகையற்ற அபிவிருத்தி.
கேள்வி :- கூட்டமைப்பிற்குள் வடக்கு மேலாதிக்கம் வெளிப்படுவதாக கருதப்படுகிறதே, அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் :- அப்படி கூறுவது அப்பட்டமான பொய், தமிழ்தேசிய அரசியல் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தாயக அரசியலே அன்றி வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் பிரித்து பிரதேசவாதத்தை மூலதனம் செய்யும் குறுகிய அரசியல் எமது கட்சியில் இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சியில் வடக்கு கிழக்கு தழுவியதாகவே முக்கிய உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் என பலர் உண்டு. எல்லா தீர்மானங்களும் எல்லோரும் அறிந்தே செயல்படுத்தப்படும், நல்ல தீர்மானங்கள் வடக்கு, கிழக்கு சார்ந்தவர் எடுத்தாலும் ஏன் எமது கொழும்பு தமிழரசுகட்சி கிளை எடுத்தாலும் மக்களுக்கு நன்மை எனின் அது ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை. மேலாதிக்கம் என்பது இலங்கை அரசில்தான் உள்ளது எமது கட்சியில் இல்லை, சிலர் பிரதேச வாதம் பேசும் நபர்கள் இவ்வாறான கட்டுக்கதைகளை தெரிவிப்பது இன்று நேற்றல்ல இது 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளதுதானே.
கேள்வி :- கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லாத நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வை எவ்வாறு எதிர்பார்ப்பது ?
பதில் :- ஜனநாயக கட்சிகள் எதுவாக இருந்தாலும் கருத்து முரண்பாடுகள் தவிர்க்க முடியாதது. ஒரு கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் இருக்கும்போது மூன்று கட்சிகள் இணைந்த தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பது சகஜம் தானே? ஏன் கட்சிகளுக்கு மட்டுமில்லையே கடவுள்களிலும் கருத்து முரண்பாடுகள் உள்ளதே இதற்கு நல்ல உதாரணம் “சிவபெருமானும் உமையம்மையும் தமது புதல்வர்களான பிள்ளையாரையும், முருகப்பெருமானையும் அழைத்து உலகத்தை முதல் சுற்றி வருபவருக்கே மாம்பழம் பரிசாக தரப்படும் என கூறியபோது பிள்ளையார் தமது தந்தையான சிவனையும் தாயான பர்வதியையும் சுற்றிவந்து தந்தையும் தாயும் உலகம் என்ற கருத்தை வெளிக்காட்டி பரிசை பெற்றார், ஆனால் முருகப்பெருமான் பிள்ளையாரின் அந்த கருத்துக்கு உடன்படவில்லை மயில் வாகனத்தில் ஏறி உலகை்சுற்றி இதுதான் உலகம் என்றார்.
இந்த கதையில் நாம் உணர்வது கடவுளுக்கும் ஒத்த வருத்து இருக்கவில்லை மாற்று கருத்துச் சிந்தனை இருந்தது அப்படியானால் மனிதர்களான எமக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் கருத்தொற்றுமை வருமா? முரண்பாடுகள் வருவதும் ஒற்றுமை வருவதும் இயல்புதானே!
பிள்ளையாருக்கும் முருகனுக்கும் சிந்தனை வெவ்வேறாக இருந்தது செயல் வேறாக இருந்தது ஆனால் அவர்கள் ஒற்றுமையாகவே இருந்தார்கள் இதுதான் எமது கட்சிக்கும் எடுத்துக்காட்டு.
கேள்வி :- கிழக்கு தொல்லியல் செயலணியில் மேலும் பெளத்த மதகுருமார் இணைக்கப்பட்டுள்ளனரே?
பதில் :- சிங்கள பௌத்த இனவாதம் இலங்கையில் ஆட்சி செய்யும் போது இப்படியான இனவாத செயல்களை இலேசாக முறியடிக்க முடியாது. ஆனால் இதன் வெளிப்பாடுகளை சர்வதேச சமூகத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது தமிழ்தேசிய அரசியல் தலைமைகளின் தலையாய கடமை. அதனை நாம் செய்துள்ளோம். தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும்.
கேள்வி :- தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், அம்பாறைக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியது தொடர்பில் கூற விழைவது ?
பதில் :- பொருத்தமான ஒருவராக பல் நெடுங்காலம் என்னுடன் இணைந்து பல இக்கட்டான உயிர் ஆபத்துகளை சந்தித்து மயிர் இழையில் என்னை போன்று தப்பி பிழைத்த தவராசா கலையரனுக்கு தேசிய பட்டியல் வழங்கியது மிகவும் பொருத்தமான விடயம். ஆனால் அந்த விடயத்தை இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் செய்தது மட்டுமே தவறு என்பதை கடந்த 29/08/2020, வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுகட்சி மத்திய குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திற்கு தவராசா கலையரசன் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதை தலைவர் மாவை சேனாதிராசா உட்பட அனைவரும் மிகவும் மன மகிழ்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.
கேள்வி :- இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் கூட்டமைப்பின் எதிர்கால ஆயத்த ஏற்பாடுகள் கலந்துரையாடப்பட்டதா ?
பதில் :- எதிர்கால செயல்பாடுகள் ஆராயப்பட்டன. மிகவிரைவில் மீண்டும் மத்தியகுழு மற்றும் பொதுச்சபை என்பன கூட்டப்படவேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் வாரங்களில் இதற்கான செயல்பாடுகள் தொடரும் என்றார்.
- நேர்கண்டவர் :- பா.மோகனதாஸ்