புதிய அரசுப் பொறுப்புக்களை ஏற்று இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அரசுக்கு அழுத்தங்களை வழங்குவோர் ஒருபுறம், விமர்சிப்போர் இன்னொருபுறம், அரசுக்குள் நிலவும், அதிருப்தியாளர்களின் உளவியல் நிலையை பயன்படுத்தி அரசின் பெரும்பான்மைக்கு பங்கம் ஏற்படுத்தி அரசியல் அநுகூலங்களைப் பெற்றுக் கொள்ள திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரம் காட்டுவோர் மற்றொரு புறமுமாக நின்றுகொண்டு பிரச்சினைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமையானது நாட்டின் எதிர்காலத்திற்கு அவ்வளவு நல்ல சகுனமாக இல்லை.
தேசிய ரீதியில் ஏராளம் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கும் அதேவேளை சர்வதேச மட்டத்திலும் அரசுக்கு நெருக்கடி தரும் சில பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. அரசு பதவிக்கு வருமுன்னரே இந்தப் பிரச்சினைகளை யெல்லாம் எதிர்கொண்டு ஆகவேண்டும் என்பது ராஜபக்ஷ சகோதரர்கள் அறியாத விடயமுமல்ல. தேர்தல் காலத்தில் அரசு வழங்கியிருந்த வாக்குறுதிகள் ஒருபுறம், சர்வதேச சமூகத்துடன் உறவுகளை சுமுகமாக பேண வேண்டிய நிலை மறுபுறமுமென, கொரோனா பேரிடருக்கு பின்னரான உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் சிக்கல்களுடன் -குறிப்பாகப் பொருளாதாரப் பின்னடைவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதே அரசின் பிரதான குழப்பமாக இருக்கிறது.
சுபீட்சமான இலங்கை” என்ற ஜனாதிபதி கோத்தாபாயவின் இலக்கினை எட்டுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமேயல்ல. முன்னர் ‘மஹிந்த சிந்தனை” என்ற பிரகடனம் செய்யப்பட்ட காலம் வேறு தற்போது சுபீட்சமான இலங்கை என்ற கோத்தாபாயவின் எண்ணக் கருக்காலம் வேறு.
கொரோனா பேரிடர் காலத்திற்குள்ளும் இரண்டு தேர்தல்களைத் தாம் நினைத்தபடி, தாம் விரும்பியபடி, வெற்றிகரமாகவும், அதீத மக்கள் ஆதரவுப்பலத்துடனும் நடத்தி முடித்த சாதனைப் பெருமிதத்தில் இருக்கும் ராஜபக்ஷக்களின் அதிகாரவளம் மட்டும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துவிடாது. அதற்குமப்பால் மிகப்பெரிய ராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை மேற்கொண்டு தற்போது பெற்றுக் கொண்ட ஆட்சியை தேசிய, சர்வதேசிய ரீதியில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் முன் உள்ள பாரிய சவாலாகும்.
தேர்தலுக்கு முன்னரான அரசின் நோக்கமே 19ஆம் திருத்தச் சட்ட நீக்கம், அல்லது 20 ஆவது திருத்தச் சட்டத்தின் உருவாக்கம் என்பதாகவே இருந்தது. அதாவது முழுமையான நிறைவேற்று அதிகாரம் என்றது ஜனாதிபதி கோத்தாபாயாவின் ‘கனவு மெய்ப்பட” 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டே ஆகவேண்டும். அவ்வாறாயின் அந்த நீக்கமானது பிரதமருக்குத் தற்போதுள்ள அதிகாரங்கள் பலவற்றை பறிப்பதாக அமையும். அது இரு ராஜபக்ஷக்களுக்குமிடையே ஒரு அசௌகரியமான நிலையைத் தோற்றுவிக்கும். எனவே இந்தச் சிக்கல் சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு தந்திரரோபாய உத்தியாக 20 ஆம் திருத்தம் ஒன்றை கொண்டுவரும் யோசனையும் தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எதுவானாலும் 19 ஆவதின் நீக்கமோ 20 ஆவது சட்டத்தின் புது இணைப்போ எதுவானாலும் பிரதமருக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களை மட்டுப்படுத்தவே செய்யும். எப்படியாயினும் பொது ஜன பெரமுன என்ற கட்சியின் பெயரிலான ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சி எல்லாவகையிலும் – முரண்பாடுகள் பலவற்றிற்கு இடையேயும் – தற்போதைக்கு ஸ்தீரமானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விவகாரம் அரசின் உள்விவகாரம் மட்டுமே. ஜனாதிபதிக்கும் – பிரதமருக்கும் இடையேயான அதிகாரப் பங்கீடு தொடர்பான பிரச்சினை மட்டுமே! ஆனால் தேர்தலுக்கு முன்னரே… அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கும் முன்னரே… 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என, பௌத்த சிங்கள இனவாதிகளினதும், பௌத்த மதத் தேரர்களினதும், மதவெறி கொண்டவர்களினதும் கோஷமாக இருந்தது.
அவர்களைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது தமிழர்களுக்கு உரிமைகளை அள்ளி வழங்கும் நோக்கிலான இந்திய அரசின் திட்டத்தினால் ஏற்பாடு என்ற அபத்தமான கருத்துக்கு ஆட்பட்டவர்களாகவே உள்ளனர் இந்தப் ’13” ஆனது ஒரு துரதிர்ஷடம் பிடித்த இலக்கமாகவே எண்ணியல் சோதிடர்கள் கூறுவது சரியோ, பிழையோ… 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கை – இந்திய உடன்பாடு கைசாத்திட்ட நாளில் இருந்தே தமிழ் மக்கள் சந்தித்த அவலங்கள் சொல்லி மாளாது. மேற்படி சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை கூடத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமைசார் விடயங்களுக்கும் உத்தரவாதம் அளிக்காத ஒரு அமைப்பாகவே இதுநாள் வரை செயற்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்ற ஏற்பாடு கூட ஒரு சாதாரண நீதிமன்ற வழக்கின் மூலம் இல்லாது நீக்கப்பட்டு விட்டதுடன் 13 என்பது 13 மைனஸ் ஆகிவிட்டது. இதன் மூலம் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை எவ்வகையிலும் நிறைவேற்றாத ஒரு ஏமாற்று ஏற்பாடாகவே தமிழ் மக்களால் கருதப்படுகிறது.
இந்த நிலையிலும் 13 ஆவது சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென பௌத்த சிங்கள இனவாதத் தலைவர்களினதும், பிக்குகளினதும் கோரிக்கையானது இந்த தேர்தலில் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தவுடன் தீவிரம் கொண்டுள்ளது. தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே பிரதமர் தான் தமிழர் பிரச்சினைக்கு 13க்கும் அப்பால் (13பிளஸ்) சென்று தீர்வுகாணத் தயார் என்று உரத்து சொன்னதும் உண்டு. அது ஒரு வகையிலான அரசியல் தந்திரோபாய பேச்சு மட்டுமே. 13 பிளஸ் என்ற தனது வார்த்தையை நம்பி தமிழ் தலைமைகள் தனக்கு ஆதரவளித்தால் 13வது திருத்தச் சட்டத்தை அவர்களை கொண்டே நிராகரிக்க வைத்து நீக்கி விடலாம் என்ற நோக்கமே அதன் உட்கருத்தாகும். அது நடைபெற வாய்ப்பே இருக்கவில்லை. தமிழ் தலைமைகளை அந்தப்பக்கம் யோசிக்க இந்திய வல்லாதிக்கம் அனுமதிக்க வேண்டுமே!
வடக்கு – கிழக்கு இணைப்பு நீக்கப்பட்ட போது – அது இந்தியா- இலங்கை என்ற இருநாடுகளுக்கிடையேயான உடன்பாட்டின் ஒரு அம்சமாக இருந்தும் – தன்னை ஒரு வார்த்தை கேட்காமல் அந்த நடவடிக்கையை இலங்கை அரசு சுயமாக முடிவெடுத்து செய்தபோது இந்தியா வாய்பொத்தி ‘மௌனம்” காத்தது. அது தமிழினத்தை எப்படி இடைநடுவில் கைவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம்.
இப்போது மீண்டும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த பன்முகக் கருத்தாடல் என்பது சகல தரப்பினராலும் முன்னெடுக்கப்படுவதற்கு அதன் பின்னணியில் இருக்கும் தேசிய – மற்றும் சர்வதேசிய அரசியல் சூழ்நிலைகளே காரணமாகும். பெயருக்கு சிறுபான்மை சமூகத்தவரின் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தச் சட்டம் அவசியம் என்று கூறப்பட்டாலும் இந்தச் சட்டம் வந்த பின்னர் தமிழ் மக்கள் சந்தித்த வரலாற்றுப் பேரவலத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க இந்தச் சட்டத்தாலும் முடியவில்லை. இந்தியாவாலும் முடியவில்லை. மாறாக அந்தப் பேரவலத்தினை இனப்படுகொலையை நடத்திய இலங்கையரசுக்கு எல்லாவகையிலும் இந்தியா உதவி செய்தது என்பதே உண்மை. அதற்காக இந்திய அரசுக்கு இலங்கை அரசு வெளிப்படையாகவே பாராட்டும், நன்றியும் தெரிவித்தமையை தமிழ் மக்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். முள்ளிவாய்க்காலில் வல்லாதிக்க சக்திகள் அனைத்தும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய வலியும், வேதனையும் ஒரு பெரும் வரலாற்றுத் துயரமாகும்.
இவ்வளவும் நடந்து ஒரு தசாப்தகாலம் முடிந்த பின்னரும் கூட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக (!?) நடைமுறைப்படுத்த இந்தியா முன்வரவேண்டும் என யாசகம் கோரி நிற்கும் தமிழ்த் தலைமைகளின் இயலாமை தமிழ் மக்களால் என்றைக்கும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாத ஒன்றேயாகும். ஆக 13 ஆவது திருத்தச்சட்டம் இருந்தும் தமிழருக்குப் பயனில்லை. இல்லாமல் போனாலும் பயனில்லைத்தான். ஆனாலும் கூட அச் சட்டம் இந்திய அரசின் இந்து சமுத்திரத்தின் பிராந்தியம்; மீதான ஆதிக்க அபிலாஷைகளுக்கு முக்கியமான தொன்றாகும்.
அதே சமயம் இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதான சீனாவின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், இந்தியாவின் மேலாதிக்கத் தன்மையை இல்லாதொழிக்கவும் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது பெரும் தடையாகவே உள்ளது. இதனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை எப்படியேனும் இல்லாதொழிக்க அரசியலமைப்பு சீர்திருத்த அல்லது மாற்று அரசியல் மூலோபாய நகர்வுகளை முன்னெடுக்கப் பல்வேறு வழிகளிலும் புதிய அரசுக்கு அழுத்தத்தைச் சீனா கொடுத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுவதும் நிஜமே.
பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டி இரண்டிடமிருந்தும் தப்பித்துக் கொள்ளும் விலாங்கு மீனின் தந்திரோபாயத்தைக் கையாண்டு சமாளிக்கும் அரசின் யுக்திகள் எந்த அளவுக்கு அல்லது எது நாள் வரைக்கும் சாத்தியமாகும் என்பதே கேள்வி. அதேவேளை இது பௌத்த சிங்கள மக்களால் சிறுபான்மை இனத்தவரின் ஆதரவுப் பலமின்றி தேர்ந்தெடுக்க அரசால் ஆளப்படும் பௌத்த சிங்கள குடியரசு நாடு என்ற மதவாத அடிப்படையிலான இனத்துவ சிந்தனை வெறியை தூண்டித் தூண்டியே ஆட்சியில் அசுர பலத்துடன் அமர்ந்துள்ள அரசு சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய அவர்கள் கொடுத்துவரும் அழுத்தங்களுக்கு என்ன பதிலை வழங்கப் போகிறது.
ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தி அரசைத் தமது பூரண நெறிப்படுத்தலின் கீழ் கொண்டு வர நினைக்கும் பௌத்த சிங்கள இனவாதிகள் 13,19,20 என எதுவும் தேவையில்லை, இவையனைத்தையும் இல்லாதொழிக்க புதிய அரசியலமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என உரத்துக் குரலெழுப்பி அரசை அழுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒற்றையாட்சி, ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற அரசின் தேர்தல் காலக் கோஷத்தை நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கும் சக்திகளை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது எல்லே குணவங்ஸ தேரர், மெத்தானந்த தேரர், ஞானசாரதேரர் என நீண்ட பிக்குகளின் படையணி, 13 ஐ முற்றாக நீக்கி புதிய அரசியலமைப்பை உடன் உருவாக்கும் எனவும் எமது உள்விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு அதிகாரம் அறவே இல்லை எனவும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேச ஆரம்பித்துள்ளமை, ஆட்சியை எந்த எதிர்ப்புமின்றி தம் விருப்பப்படி அடுத்த ஒரிரு தசாப்தகாலத்திற்கு தொடர நினைக்கும் ராஜபக்ஷக்களுக்கு பெரும் தொல்லையாகவே இருக்கப்போகிறது.
எதுவானாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசனமான முறையில் உசுப்பேற்றப்பட்டிருக்கும் பௌத்த சிங்கள பேரினவாத வெறிக்கு அடிபணிந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க எடுக்கும் முயற்சிகளை இந்தியா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் என நம்புவது கடினம்.
ஏனெனில் இது இந்தியாவுக்குக் கௌரவப் பிரச்சினையாக மட்டுமல்லாது ஒரு இராஜதந்திரத் தோல்வியாகவும் அமைந்துவிடும் என நோக்கர்கள் கருதுவதும் யதார்த்தமே!
நன்றி -தினக்குரல்