அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகம் தொடங்கி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் நகரில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், அதை உடனடியாக மூடவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 2018-19 ஆண்டு கணக்கீட்டின் படி 3 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்புகள் படிக்க விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்பு பயின்றுவருபவர்கள் ஆகும்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ரகசிய தகவல்கள் திருடப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவத்துடன் ரகசிய தொடர்பில் இருந்து அவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உள்ளிட்ட ரகசிய தகவல்களை இந்த மாணவர்கள் அளிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் அவர்களது விசா ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டை சேர்ந்த 1,000 மாணவர்களின் விசாவை அமெரிக்கா ரத்து செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.