இனவாதமின்றி இனி அணுவும் அசையாது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் தன் இனத்தின், மொழியின் தொன்மை தொடர்பில் நிகழ்த்திய உரைகள் தென்னிலங்கையில் ”ஒரு தமிழன் இலங்கைக்கு உரிமை கோரி விட்டான்” என்ற இனவாதத் தொனியில் ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களினால் உருமாற்றப்பட்டு சிங்களமக்கள் உருவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாக விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசுமாறும் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இனவாதக்கோஷங்கள் வெளிக்கிளம்பி உள்ளன.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் இலங்கையின் 9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை வாழ்த்தி ஆற்றிய ”உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமான தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்” என்று தெரிவித்த விடயமே இன்று தேசத்துரோக குற்றமாகவும் தமிழ் இனவாதமாகவும் சிங்களப் பேரினவாதிகளினாலும் பேரினவாதக்கட்சிகளினாலும் மையப்படுத்தப்பட்டு 80 வயது விக்னேஸ்வரனை மீண்டும் ஒரு யுத்தத்துக்கு வழி ஏற்படுத்துகின்றார் என்றளவுக்கு அவரை சிங்களவர்களின் எதிரியாக்கி அதன் மூலம் தமது வாக்கு வங்கிகளை பலப்படுத்தும் ”இனவாத பிரசார யுக்தி” கையாளப்படுகின்றது.

”உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமான தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்” என்ற விக்னேஸ்வரனின் சாதாரண கருத்தை இனவாத பிரளயமாக்கியதில் 2010 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் அமோக ஆதரவையும் முற்றுமுழுதான வாக்குகளையும் பெற்றுக்கொண்ட இரு தலைவர்களைக் கொண்டதும் தற்போதுகூட சிறுபான்மையினக்கட்சிகளான தமிழ், முஸ்லிம் கட்சிகள் பங்காளிக்கட்சிகளாக உள்ளதுமான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியில் நிற்பதுதான் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம்களின் நிலை என்னவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சின் தலைமையில் தமிழ், முஸ்லிம் பங்காளிக்கட்சிகளின் ஒன் றிணைவில் அன்னம் சின்னத்தில் களமிறங்கி சிறுபான்மையினங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்து எதிர்த்தரப்பினரின் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானவரும் இனவாதம், மொழிவாதம் தன்னிடம் துளியும் கிடையாதெனக்கூறி தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளியவரும் தனது தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிலிருந்து பிரிந்து தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பங்காளிக்கட்சிகளாக்கிக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஆரம்பித்து அதன் ஊடாக கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலை எதிர்கொண்டு நாட்டின் எதிர்க்கட்சி த்தலைவர் அந்தஸ்தைப் பெற்றுள்ள சஜித் பிரேமதாசவே தற்போது இனவாதத்தின் புதிய தந்தையாக உருவெடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலின் அடிப்படையில் தனது கட்சியில் பங்காளிகளாகவுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கொடுத்த வாக்குறுதியை மீறி முதன் முதலாக இனவாத முகத்தைக் காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி தலைவரான சஜித் பிரேமதாச, கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிராக தனது கட்சி எம்.பி.க்கள் முன்னெடுத்த இனவாதத்துக்கும் முழுமையான ஆதரவை வழங்கி இனிமேல் இதுதான் என் அரசியல், இதுதான் என் வழி என்பதை இலங்கையின் 9 ஆவது புதிய பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

”உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமான தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்” என்ற விக்னேஸ்வரனின் உரைக்கு மட்டுமன்றி, கட்சித் தலைவர் என்ற பெயரில் ஒரேயொரு உறுப்பினரைக் கொண்ட ,அதுவும் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானவருக்கெல்லாம் முதல் வரிசையில் ஆசனம் எப்படி வழங்க முடியும்? எமது கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் எல்லாம் பின்வரிசையில் இருக்க இவர்களுக்கு மட்டும் முன்வரிசை ஆசனங்களா, என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட எம்.பி.யான அலி சப்ரி ரஹீம் ஆகியோரை குறிப்பிட்டு இனவாத ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியமையும் புதிய தமிழ், முஸ்லிம்களின் தலைவர்களுக்கு முன் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவதனைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத இனவாத சிந்தனையில் சஜித் பிரேமதாச தரப்பினர் மூழ்கி இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது .

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரை இந்தக் கட்சியிலுள்ளவர்களுக்குத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களையும் பகைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் தனது முழுமையான ஆதரவை வழங்கி வந்ததுடன் இவர்களின் ஆட்சியைப் பாதுகாக்கவும் போராடியது.அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச கடந்த 2019 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் நின்றபோது தமிழ் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு முழுமையான ஆதரவை வழங்கியதுடன் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. இதனால் ஒட்டு மொத்த வடக்கு,கிழக்கு மக்களும் சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களித்தனர்.

இந்த ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாச 5,564,239 வாக்குகளை பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபாய ராஜபக்ச 2,77,019 வாக்குகளைப் பெற்ற நிலையில் சஜித் பிரேமதாச 1152624 வாக்குகளைப்பெற்றிருந்தார். இதில் வடக்கில் கோத்தபாய ராஜபக்ச49,366 அக்குளை மட்டுமே பெற்றிருந்த நிலையில் சஜித் பிரேமதாச 10 மடங்கு அதிகமாக 4,87461 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேபோன்று கிழக்கு மாகாணத்தில்கோத்தபாய ராஜபக்ச 2,27653 வாக்குகளை ப்பெற்ற நிலையில் சஜித் பிரேமதாச மூன்று மடங்கு அதிகமாக 6.65163 வாக்குளைப் பெற்றிருந்தார்.

இந்த இரு மாகாணங்களில் மட்டுமே சஜித் பிரேமதாச முன்னணியில் இருந்தார். அத்துடன் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் சஜித் பிரேமதாச முன்னணி பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாச சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டபோது தமிழ், முஸ்லிம் மக்களே அவருக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர். அப்படி தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ”இனவாதமற்றவர்” என முத்திரைகுத்தப்பட்டு தமிழ் மக்களின் வாக்குகள் பெற்றுக்கொடுக்கப்பட்டவர்தான் தற்போது ராஜபக்சக்களை விஞ்சியவராக இனவாதத்தை உசுப்பி விட்டுள்ளார்.

அடுத்தவர் முன்னாள் இராணுவத்தளபதியும் 2010 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் சிறுபான்மையினக் கட்சிகளான தமிழ் ,முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவுடன் அன்னம் சின்னத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக களமிறக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இவரும் விக்கினேஸ்வரனின் தமிழ் மொழி , தமிழன் தொடர்பான உரைக்கு எதிராக பாராளுமன்றத்தில் இனவாதம் கக்கி தமிழர்களுக்கும் விக்னேஸ்வரனுக்கும் எச்சரிக்கை விட்டார் .

”விக்னேஸ்வரன் எம்.பி.க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கும் சில விடயங்களை நினைவூட்ட வேண்டும். தாய் நாடு தொடர்பாக இந்த சபையில் கதைத்து இனவாதத்தை தூண்டுவதை எங்களுக்கு செய்யும் அவமதிப்பை போன்றும் பாராளுமன்றத்தின் கௌவரத்தை கெடுக்கும் செயலாகவுமே நாங்கள் பார்க்கின்றோம். பழமையான மொழியை பேசுபவர்கள் தமிழர்களே என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதன்மூலம் சிங்களவர்கள் அதன் பின்னர் இந்த நாட்டுக்கு வந்தவர்கள் என்பதனையே அவர் சொல்லாமல் சொல்கிறார். இந்நிலையில் அவருக்கு சிங்கள மக்களை குறைத்து மதிப்பிட்டு சிங்களவர்களுக்குரிய இடத்தை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கும் எவருக்கும் நாங்கள் தலை குனியப் போவதுமில்லை. அவ்வாறானவர்களுக்கு இந்த நாட்டில் இருப்பும் இல்லை என்பதனை கூறிக் கொள்கின்றேன்.

இதேவேளை விக்னேஸ்வரன் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியது என்ன வென்றால் எம்.பியாக இருந்த அமிர்தலிங்கம் தமிழ் இளைஞர்களை சிங்களவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு இறுதியில் அந்த இளைஞர்களாலேயே அவர் ரவைக்கு இரையானார்.அத்துடன் பிரபாகரன் தனிநாடு கோரினார். அவருக்கு இறுதியில் என்ன நடந்தது என்று தெரியும்தானே. இந்நிலையில் விக்னேஸ்வரனால் பிரபாகரனாக முடியாது. ஏனென்றால் அதற்கான வயது இல்லை. அதற்கான நேரமும் இல்லை. விக்னேஸ்வரன் மீண்டும் சிங்களவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறக் கூடாது. அதனையும் மீறி நீங்கள் செய்தால் மோசமான விளைவை எதிர்கொள்ள நேரிடும். இதனை புரிந்துகொள்ள வேண்டும்” என்று சரத் பொன்சேகா மிரட்டல் தொனியில் எச்சரித்தார்.

சஜித் பிரேமதாசாவை 2019 ஜனாதிபதித்தேர்தலில் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி அவரை தமிழ் மக்களின் பாதுகாவலனாக உருவகப்படுத்தியதோ அதேபோன்றே சரத்பொன்சேகாவையும் தமிழ் மக்களின் பாதுகாவலனாகவே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவகப்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரில் போர்க்குற்றவாளியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு 2010 ஆம் ஆண்டு நடந்த ஜனா திபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பிரசாரத்தில் ஈடுபட்டது. அப்போது இதற்கு தமிழ் மக்களிடையில் கடும் எதிர்ப்புக் கிளம்பவே ரணிலை நம்புங்கள், மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாகி விடக்கூடாது என்பதற்காகவே சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை சமாதானப்படுத்தியது.

சரத் பொன்சேகாவும் அந்த ஜனாதிபதித் தேர்தலில் 4,173,185 வாக்குகளைப்பெற்ற போதும் மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வி கண்டார். இந்த வாக்குகளில் தமிழ், முஸ்லி ம் மக்களின் தாயகப் பிரதேசமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மட்டும் சரத் பொன்சேகா 5,710 67 வாக்குகளைப் பெற்றிருந்தார். வடக்கில் மஹிந்த ராஜபக்ச 72,894 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் சரத்பொன்சேகா 1,84,244 வாக்குகளைப் பெற்றார். அதேபோன்றே கிழக்கில் மஹிந்த ராஜபக்ச 2,72,327 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் சரத்பொன்சேகா 3,86, 823 வாக்குகளைப் பெற்றார். இந்த இரு மாகாணங்களில் மட்டுமே அவர் வெற்றியும் பெற்றிருந்தார். சஜித்தை போன்றே தமிழர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தார்.

இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் அப்போதைய ஐக்கிய தேசுயக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீதான எஜமானிய விசுவாசத்துக்காக 2010 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பாதுகாவலனாக காட்டப்பட்டு ,தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெற்றுக்கொண்ட சரத் பொன்சேகாவும் அதே ரணில் விக்கிரமசிங்க மீதான எஜமானிய விசுவாசத்துக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் 2019 ஆம் ஆண்டு ஜானதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பாதுகாவலனாக காட்டப்பட்டு ,தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெற்றுக்கொண்ட சஜித் பிரேமதாசவுமே இப்போது தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக இனவாத ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். இராணுவத் தளபதியாக இறுதிப்போரை நடத்திய சரத்பொன்சேகா இனவாதி மட்டுமல்ல போர்க்குற்றவாளி என்பதும் தமிழ் மக்களுக்கு தெரிந்திருந்த போதும் சஜித் பிரேமதாச மீது தமிழ் மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் மனோகணேசன் , திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்ற சிறுபான்மையினத்தலைவர்களும் பங்காளிகளாகவுள்ளனர். ஆனால் தேசியப்பட்டியலில் இவர்களுக்குத்தான் முதலில் சஜித் தனது இனவாத முகத்தைக் காட்டியிருந்தார். ராஜபக்சக்களை சமாளிக்க வேண்டுமானால் நாமும் கொஞ்சம் இனவாதம் பேசத்தான் வேண்டுமென சிறுபான்மையினக் கட்சித் தலைவர்களான இவர்களுக்கு சஜித் தரப்பால் சமாதானம் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இவர்கள் இனவாத நடிப்பை வெளிப்படுத்தி சிங்கள மக்களை ஏமாற்றுகின்றார்களா அல்லது இனவாதமற்றவர்களாக காட்டி தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றார்களா எனக்கேள்வி எழுந்தால் அதற்கு இவர்கள் இரு தரப்புக்களையும் ஏமாற்றி தமது இலக்கை அடைய முயற்சிக்கின்றனர் என்பதே பதில்.

இதேவேளை தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன அரசில் இனவாதத்தின் தந்தைகள் எனப் பலர் உள்ள நிலையில் அந்த அரசுக்கு எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் இப்போதுதான் இனவாதத்தின் பிள்ளைகள் துள்ளி விளையாடத் தொடங்கியுள்ளனர். எனவே இந்த இரு கட்சிகளும் தமது அரசியல், வாக்கு வங்கிக்கான முதலீடாக சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தையே ஆயுதமாக்கியுள்ளதால் இனிவரும் காலத்தில் இவ்விரு பிரதான கட்சிகளிடையிலும் இனவாதம், மதவாதத்தில் கடும் போட்டியே இடம்பெறவுள்ளது. இதனால் நாட்டிலுள்ள சிறுபான்மையினங்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது கானல் நீராகவுள்ளது.

இலங்கையின் 9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் கடந்த 4 நாள் அமர்வுகளுமே தமிழர்களின் புதிய அரசு ,புதிய எதிர்க்கட்சி மீதான எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியுள்ளது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் எவராவது, தமது இன .மொழி வரலாற்றைச் சுட்டிக்காட்டி அல்லது சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் பேசக்கூடாது. அப்படி தமது இனத்துக்காக, மொழிக்காக பேச முயற்சிப்பவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது.அப்படி மீறிப்பேசினால் அவர்களைத் தெரிவு செய்த மக்களும் அதற்கான விலையைக்கொடுக்க வேண்டி நேரிடும்.நாம் தான் இந்த நாட்டின் மூத்த குடிகள் .நீங்கள் வந்தேறு குடிகள், நாம் சொல்வதனை நீங்கள் அனைத்தையும் பொத்திக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற இனவாத சிந்தனையில் அரச மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஒரே கோட்டில் இருப்பதால் சிறுபான்மையினங்களுக்கு இலங்கையில் இனிமேல் விமோசனம் கிடைக்கப் போவதில்லை.

தாயகன்