கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலங்களில் தமிழர்கள் மீளவும் குடியமரவும், விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
மேற்படி நிலங்களில் ஆமையன் குளம், முந்திரிகைக்குளம், சாம்பன் குளம், மணற்கேணி, ஆகிய பகுதிகளில் உறுதியுடையதும் அனுமதிப்பத்திரமுடையதுமான 784 ஏக்கர் நிலம் அந்தப் பகுதியைச் சேராத சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மீதியாகவுள்ள 1,740 ஏக்கர் நிலம் மகாவலி எல் வலயத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடவும், காணி உரிமங்களை பெற்றுக் கொள்வதற்கும் அவ்வதிகாரசபை தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலமை வவுனியா வடக்கில் நெடுங்கேணி, மருதோடை, பட்டிக்குடியிருப்பு, கட்டுக்குளம், மன்னன்குளம், புளியங்குளம் வடக்கு, காஞ்சுரமோட்டை, விண்ணாங்குப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் தொடர்கிறது என்றும் அங்கு தமிழ் மக்களுக்குரிய 960 ஏக்கர் காணிகளில் பயிரிடுவதற்கு இராணுவமும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி வழங்க மறுத்துள்ளமையையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு நேர பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு.
போருக்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருண்மியச் சுமைகள் அவர்களை தற்கொலைக்குத் தள்ளுவதாகவும். அரசாங்கம் இவ்வியடத்தில் கவனம் செலுத்தி தடைகளை அகற்ற முன்வரவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் தனது உரையின்போது வலியுறுத்தியுள்ளார்.
2005 ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையான காலப்பகுதியிலான மகிந்த இராஜபக்சவின் ஆட்சிகாலத்துடன் ஒப்பிட்டு 2015ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு காலபகுதிக்கான மத்திய வங்கியின் நிதி அறிக்கை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இரஞ்சித் பண்டாரா சமர்ப்பித்திருக்கும் ஒத்திவைப்புப் பிரேரணை தொடர்பில் உரையாற்றும்போது கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
மத்தியவங்கியின் ஆளுனர் பேராசிரியர் லகஸ்மன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து அங்கு பல கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இன்றை பத்திரிகைகளில் குறிப்பாக டெயிலி எப்ரி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தக் கூடடங்களிற்கான முக்கிய நோக்கம், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட முறைசார் மற்றும் முறைசாரா நிதிநிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு அவர்களுடைய பங்களிப்புடன் தீர்வினை எட்டுவது எனவும் இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
போருக்குப் பின்னரான காலத்தில், வடக்குக் கிழக்கில் கடன் பிரச்சனை என்பது அதிலும் குறிப்பாக நுண்கடன் தொடர்பான பிரச்சனைகள் மக்களை தற்கொலைக்கு தூண்டுமளவிற்கு மோசமானதாக உருவெடுத்துள்ளன.