2 கோடி ரூபாய் கொடுத்து தத்தெடுத்த பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வனப்பகுதியை தத்தெடுத்து இருக்கிறார்.

ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது.
பிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப்பகுதி, ஐதராபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஐதராபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான அடிக்கல்லை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் பிரபாஸ் நட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அந்த வனப் பகுதியை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றிலிருந்து மூவரும் பார்வையிட்டனர். பின்னர் வனப் பகுதியில் மரக் கன்றுகளும் நட்டனர். இந்த வனப்பகுதியில் ஒரு சிறுபகுதி நகர்ப்புற வனப் பூங்காவாக மாற்றப்படும் எனவும், மூன்று தொகுதிகளாக விரிந்திருக்கும் எஞ்சிய பகுதிகள் அரியவகை மூலிகைகள் மற்றும் தவரங்களைக் கொண்டன என்றும் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் எனவும் வன அலுவலர்கள் தெரிவித்தனர்.
பிரபாஸ்
இதுகுறித்து பிரபாஸ் கூறுகையில், தமது நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான, மாண்புமிகு ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரின் செயல்பாடுகள் இந்த வனப் பகுதியைத் தத்தெடுக்கத் தமக்கு உத்வேகம் அளித்ததாகவும் வருங்காலங்களில் பணிகளின் முன்னேற்றத்தைப் பொருத்துக் கூடுதல் நிதியைத் தவணைமுறையில் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். ஐதராபாத் நகரின் நுரையீரல் பரப்பை அதிகரிக்கும் வண்ணம் வன மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு வன அலுவலர்களை பிரபாஸ் கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் மற்றும் வன அலுவலர்களுக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்தார்.