சீனக் காவல்துறையினர் விசாரிக்க முற்பட்டதால் இரு ஆஸ்திரேலியச் செய்தியாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் பணியாற்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெய்ச்சிங்கில் பணிபுரிந்த பில் பர்ட்டல்ஸும் (Bill Birtles) ஷங்ஹாயில் பணிபுரிந்த மைக்கல் ஸ்மித்தும் (Micheal Smith) ஆஸ்திரேலிய அரசதந்திர அலுவலகங்களில் சில நாள்கள் தஞ்சமடைந்த பிறகே நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அவரை விசாரிக்க விரும்புவதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பர்ட்டல்ஸ் உடனடியாக ஆஸ்திரேலியத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.
அதே போன்று ஷங்ஹாயிலிருந்த ஸ்மித்துக்கும் நேர்ந்தது.
சென்ற மாதம் செங் லெய் (Cheng Lei) என்ற ஆஸ்திரேலியச் செய்தியாளர் சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
அதற்கான காரணத்தைச் சீனக் காவல்துறை வெளியிடவில்லை.
நேற்றிரவு (7 செப்டம்பர்) ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகளுடன் பர்ட்டல்ஸ், ஸ்மித் இருவரும் சிட்னிக்குப் புறப்பட்டனர்; இன்று காலை அவர்கள் சிட்னியை அடைந்தனர்.
கொரோனா நோய்த்தொற்று சீனாவில் தொடங்கியது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அனைத்துலகக் கோரிக்கைகளில் ஆஸ்திரேலியா முன்னணி வகித்தது.
அதன் காரணமாக சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டது.