ஜமால் கஷோகி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாக கூறியதுடன் இதற்கான காணொளி மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் துருக்கி கூறியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை பட்டத்து இளவரசர் திட்டவட்டமாக மறுத்த நிலையில் ஜமால் கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கொலையில் நேரடியாக தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனையும், 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்து சவுதி அரேபியா உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் ஜமால் கொலை வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal