- அவுஸ்திரேலியாவைக் கொரோனாத் தொற்று களைப்படையச் செய்கின்றது. இயல்புநிலை விரைவில் திரும்பிவிடுமென சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது தொற்று எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்திருந்தது. அதனால் நம்பிக்கைகள் வலுப்பெற்றன. அத்தகைய சூழ்நிலையிலேயே, ஆனி மாதமளவில் மீண்டும் தொற்று ஏற்பட்டது.
அதனால் தொற்றுத் தடுப்பு ஏற்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன. மாநில எல்லைகள் மூடப்பட்டன. உள்நாட்டுப் போக்குவரத்து முடங்கியது. தற்போது மூடப்பட்ட எல்லைகளே சவாலாகின்றன.
எல்லைப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாகியது. அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதே சவாலாகியது. விக்டோரியாவையும் நியூசவுத்வேல்சையும் பிரிக்கும் மறே நதிக்கரையின் இருபுறமும் காணப்படுகின்ற நகரங்களான அல்பெறியும், வொடங்காவும் எதிர்கொள்ளும் சவால்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். மறுவளத்தில், குவின்ஸ்லாந்து தலைநகர் பிறிஸ்பேர்னிலிருந்து, ஒருமணி நேர வாகனப்பயணத்தில் செல்லக்கூடிய நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் வாழ்ந்த கர்ப்பிணித் தாயொருவர், அவசர சிகிச்சைக்காக எல்லைகளைக் கடக்க முடியாமல், இரணைக் குழந்தைகளில் ஒன்றை இழந்திருக்கின்றார்.
அவுஸ்திரேலியா சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டதாகும். கல்வி, சுகாதாரம், பொலிஸ் போன்ற விடயங்களில் சட்டம் இயற்றும் சுயாதீன அதிகாரம் மாநிலங்களிடம் காணப்படுகின்றன. நூற்றாண்டைக் கடந்த சமஷ்டி ஆட்சி முறையில், மாநிலங்களிடையேயான உரசல்கள் இலைமறைகாயாகக் காணப்பட்டன. கொரோனாப் பேரிடரிலே, அவை வெளிப்படத் தொடங்குகின்றன. அதற்கு, இரணைக் குழந்தைகளில் ஒன்று இறந்த சம்பவம் எடுத்துக்காட்டாகும். எல்லைகள் மூடப்பட்டிருந்த சூழ்நிலையில், அவசரசிகிச்சை கிடைக்காததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டது. அதனால் சலசலப்புக்கள் ஏற்பட்டன. அப்போது, குவின்ஸ்லாந்து மருத்துவமனைகள், குவின்ஸ்லாந்துக்காரருக்கே என மாநிலப் பிரீமியர் (தலைமை அமைச்சர்) குறிப்பிட்டார். அஃது, பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையை நினைவுபடுத்தின. இத்தகைய சம்பவங்களே, மாநிலங்களிடையே மறைந்திருக்கும் உட்கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றன.
ஆரம்பத்தில், கொரோனாத் தொற்றைக் கையாள்வதில் ஒருமித்த அணுகுமுறை ஏற்படவில்லை. சில மாநிலங்கள், தொற்று நீக்கத்தை (எலிமினேஷன்) மூலோபாயமாகக் கருதின. மற்றயவை, தொற்று அடக்கலை (சப்றஷன்) மூலோபாயமாகக் கருதின. அதனால், தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வேறுபட்ட பெறுபேறுகளே கிடைத்தன. மாறுபட்ட மூலோபாயங்களே, அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்பதை இப்பத்தி முன்பே சுட்டிக்காட்டியிருந்தது.
அடுத்து, எல்லைகளை மூடுவது மற்றும் திறப்பது தொடர்பிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. எல்லைகள் மூடப்பட்ட நிலையில், இயல்பை இழந்த தேசமாகத் தொடர முடியாது. கிறிஸ்மஸ்சுக்கு முன்பாகவே, தேசத்தின் உள்ளக எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை, அவுஸ்திரேலியப் பிரதமர் முன்வைத்தார். பெரும்பாலான மாநிலங்கள், பிரதமரின் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டன. குவின்ஸ்லாந்து பின்னடிக்கின்றது. தெற்கேயுள்ள மாநிலங்களில் சமூகப்பரவல் முற்றாக நிறுத்தப்படவேண்டும். அதிலிருந்து ஒருமாதம் கடந்த பின்னரே எல்லைகளைத் திறக்கலாம் என்பது குவின்ஸ்லாந்தின் நிலைப்பாடாக வலுவடைகின்றது. மேற்கு அவுஸ்திரேலியா எல்லைகளைத் திறப்பதற்கு மறுக்கின்றது. பஸ் புறப்படப்போகின்றது. இன்னும் சிலர் ஏறவில்லை என நகைச்சுவை கலந்து, சூழ்நிலையின் இறுக்கத்தை அவுஸ்திரேலியப் பிரதமர் தணிக்க முற்படுகின்றார்.
கொரோனாத் தொற்றினால், மெல்பேர்ன் மாநகரே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. தொற்றின் வீரியம் குறைவது தொடர்பிலான, உறுதியான சமிக்ஞைகளுக்கான காத்திருப்புத் தொடர்கின்றது. லொக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பிலான காலஅட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. உடனடியாக முடிவுக்குவராத லொக்டவுன், மக்களைச் சோர்வடையச் செய்கின்றது. லொக்டவுனுக்கு எதிரான கண்டனக் குரல்கள் அதிகரிக்கின்றன. அத்தகைய சலசலப்புகளுக்கு மத்தியிலும், விக்டோரியா அரசு மக்களின் நலன்சார்ந்து செயற்படுகின்றது.
அவுஸ்திரேலியப் பொருளாதாரத்தை லொக்டவுன் பெரிதும் அசைத்திருக்கின்றது. பொருளாதார மந்தநிலையின் ஆரம்ப சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஒருமில்லியன் வரையான வேலையிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நுகர்வோர் செலவீனம் வீழ்ச்சியடைந்திருகின்றது. அத்தியாவசிய கொள்வனவுகளே அதிகமாக இடம்பெறுகின்றன. ஹோட்டல் சாப்பாட்டுக் கலாச்சாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணங்கள் தடைப்பட்டிருக்கின்றன. மார்ச்சில் ஆரம்பித்த வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாடுகள், டிசம்பர் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளன. உல்லாசக் கப்பல் (குரூஸ்) போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையிலேயே, தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மூலோபாயம், புதிய கோணத்தில் பார்க்கப்படுகின்றது. லொக்டவுன் பொறிமுறை, கடுமையான கண்டனத்துக்கு உட்படுகின்றது. அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுகின்றது. தொற்றை, முழுவதுமாக நீக்கமுடியாது என்னும் எண்ணம் வலுப்பெறுகின்றது. தொற்று எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே, யதார்த்தமான இலக்கு என்னும் நிலைப்பாடு ஏற்படுகின்றது.
முகவசம் (மாஸ்க்) அணிவது வழமையாகவேண்டும். அதன்மூலம் தொற்றுப் பரவலை மட்டுப்படுத்தலாம். இருந்தாலும், தொற்று அவ்வப்போது ஏற்படலாம். அதன்போது, தொற்று வட்டகைகளை (கிளஸ்டேர்ஸ்) வேகமாக அடையாளப்படுத்தவேண்டும். அதற்கு, ஆள் அடையாளம் காணுகின்ற வழிமுறைகளை (காண்டாக்ட் ட்ரேசிங்) உச்சப்பட்ச இயங்குதன்மையில் பேணவேண்டும். அதன்மூலமாகச் சமூகப்பரவலைக் கட்டுப்படுத்தலாம். அதுவே, யதார்த்தமான பொறிமுறை என விதந்து பேசப்படுகின்றது. அந்தவகையிலே, கொரோனாவுடன் வாழப்பழகுதல் என்னும் சிந்தனை, வேகமாகக் காலூன்றுகின்றது.
இத்தகைய அணுகுமுறை வழியாகத் தேசத்தின் உள்ளக எல்லைகள் திறக்கப்படலாம். தேசம் தழுவிய பொருளாதாரச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். இயல்புநிலைக்குத் திரும்பலாம் என்பதாகச் சொல்லப்படுகின்றது. இவற்றைக் கொரோனா இல்லாத சூழலில் அடையலாம் என்று சொல்லப்படவில்லை. மாறாக, கொரோனாத் தொற்றுக்கு எதிரான தற்காப்பு வழிமுறைகளுடன் அடையலாம் என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறாக நம்பிக்கை நாற்றுக்கள் நடப்படுகின்றன. காத்திருப்புக்கள் தொடர்கின்றன.
- நியூசிலாந்து சிற்சபேசன்