தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உடனடியாக வி.மணிவண்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இனிமேல் மணிவண்ணன் இயக்கத்தின் பெயரை பாவிக்க முடியாது என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று அறிவித்துள்ளார்.
தமிழ் காங்கிரசின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் இதனை அவர் தெரிவித்தார். இப்பிரச்சினை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது;
;மணிவண்ணன் கட்சிக் கொள்கைக்கு முரணாகவும், கட்சி தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும் அவர் தன்னுடைய தேசிய அமைப்பாளர் பதவியையும், பேச்சாளர் பதவியையும பயன்படுத்தினார் என மத்தியகுழு தீர்மானத்திற்கு வந்ததன் பின்னர், அவருக்கு எழுத்துமூலமாக மத்திகுழுவின் முடிவு அறிவிக்கப்பட்டது. அவர் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மணிவண்ணனின் விளக்கத்தையும் எதிர்பார்த்திருந்தோம். அவர் மத்தியகுழுவிற்கு தனது பதிலை அனுப்பியிருந்தார். அதை மத்தியகுழு ஆராய்ந்து, அவரது பதில் ஏற்றுக்கொள்ள முடியாதது, மத்தியகுழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் செயற்பட முனைந்ததால், உடனடியாக நடைமுறைக்க வரும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு இன்று எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களிற்குள் அவர் தன்னுடைய பதிலை மத்தியகுழுவிற்கு அனுப்பி வைக்கலாம். உறுப்புரிமையை இடைநிறுத்தியதை நிரந்தரமாக கருதப்படாமலிருக்க அவரது நியாயங்களை முன்வைக்கலாம். இரண்டு வார அவகாசத்தின் பின்னர் ஒழுக்காற்றுகுழு நியமிக்கப்பட்டு, சாட்சியங்களுடன், அவர் மீதான குற்றப்பத்திரிகையில் ஆறு குற்றங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும். விசாரணையின் முடிவின் பிரகாரம், அவர் கட்சியில் தொடர்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
இன்று முதல் அவர் கட்சியின் பெயரை பயன்படுத்த முடியாது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரிலோ, சின்னத்திலோ அவர் இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் அவர் செயற்பட்டால், அது கட்சி சார்ந்து அல்லாமல், அது கட்சி விதியை மீறியதாகத்தான் கருதப்படும்.
Eelamurasu Australia Online News Portal