ஐ.தே.க இறந்துவிட்டதா?

ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட எந்தவொரு மாவட்டத்திலேனும், ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற முடியாத அளவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், பொதுமக்கள் நிராகரித்துவிட்டார்களா?

நாம் இவ்வாறு கேட்கும்போது இவ்வளவு தெளிவாகத் தெரியும் ஒரு விடயத்தைச் சந்தேகிக்க வேண்டுமா என, மற்றவர்கள் கேட்கலாம். ஆனால், ஐ.தே.கவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவும் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், அவர்கள் இம்முறை சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற 54 ஆசனங்களை விட ஒரு சில ஆசனங்களையாவது கூடுதலாகப் பெற்றிருக்க மாட்டார்களா?

அவ்விரு குழுக்களும் இணைந்துப் போட்டியிடும் அதேவேளை, ரணிலும் சஜித்தும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு இருந்தால் ரணில் கடந்த முறை பெற்ற அளவில் விருப்பு வாக்குகளைப் பெறாவிட்டாலும் சஜித்தைவிட விருப்பு வாக்குகளைப் பெறாதிருப்பாரா? அவ்வாறாயின், என்ன நடந்திருக்கிறது? ஐக்கிய தேசிய கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனரெனக் கூற முடியுமா?

இது ஒரு விசித்திரமான நிலைமை. ஐ.தே.க ஆதரவாளர்கள் சஜித்தை விட ரணிலை விரும்புகிறார்கள்; அல்லது மதிக்கிறார்கள். ஆனால், அவரது தலைமையில் தேர்தல்களில் வெற்றியடைய முடியாது என்றும் கருதுகிறார்கள். எனவே அவர்கள் ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக இம்முறை சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பின்னால் அணி திரண்டனர்.

இது மக்கள் விடுதலை முன்னணியின் நிலைமையையே ஞாபகமூட்டுகிறது. நாட்டு மக்களில் பெருமளவானோர் அக்கட்சியை விரும்புகிறார்கள், மதிக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் என்றும் அவர்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், தேர்தல் வந்த போது, அக்கட்சி பதவிக்கு வராது என நினைத்து ஏதாவதொரு பிரதான கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.

2004ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அம்முறை அவர்களுக்கு 41 ஆசனங்கள் கிடைத்தன. ஸ்ரீ ல.சு.க தமது முன்னணி உறுப்பினர்களுக்கு வழங்க போதிய தேசிய பட்டியல் ஆசனங்கள் இல்லாமல் இருப்பதைக் கண்ட மக்கள் விடுதலை முன்னணி தமக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனங்களில் இரண்டை அக் கட்சிக்கு அன்பளிப்பாகவும் வழங்கியது.

அத்தேர்தலின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்கள் பல மாவட்டங்களில் தம்மோடு கூட்டாகப் போட்டியிட்ட பிரபல ஸ்ரீ ல.சு.க வேட்பாளர்களை விடக் கூடுதலாக விருப்பு வாக்குகளைப் பெற்றனர். ஆனால் அக் கட்சி தனியாகப் போட்டியிட்டு ஒருபோதும் 16 ஆசனங்களை விடக் கூடுதலாகப் பெற்றதில்லை. அக் கட்சியின் வேட்பாளர்கள் அந்தளவு விருப்பு வாக்குகளை அதற்கு முன்னரோ பின்னரோ பெற்றதும் இல்லை.

தாம் ஒரு கட்சியை ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் 54 ஆசனங்களைப் பெற்றொம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வீராப்புப் பேசுகின்றனர். அது பிழையான கருத்தாகும். ஐக்கிய மக்கள் சக்தி என்பது நடைமுறையில் புதிய கட்சியல்ல. ஐதேகவுக்குள் தலைமைத்துவப் போராட்டம் ஆரம்பித்த போது ஒரு சிலரைத் தவிர கட்சி ஆதரவாளர்கள் அனைவருமே கட்சியின் பெயர் பலகையையும் தலைவரையும் கைவிட்டுவிட்டு சஜித் பிரேமதாஸவின் அணியில் சேர்ந்துவிட்டனர். அந்தக் குழு தான் பின்னர் தமக்கு ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரைச் சூட்டிக் கொண்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும் இதேபோல் தாம் கட்சியை ஆரம்பித்து மூன்று வருடங்களில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டோம் எனக் கூறுகின்றனர். ஆனால், பொதுஜன பெரமுன என்பதும் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியல்ல. கட்சியின் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் பார்க்கும் போது அது 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்தவின் தலைமையில் இயங்கிய ஸ்ரீ ல.சு.கவே என்பது தெளிவாகிறது. அவர்கள் தமக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரைச் சூட்டிக் கொண்டுள்ளனர். அவ்வளவு தான்!

நாம், ஏற்கெனவே இப்பத்தியில் கூறியது போல், ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கு கொள்கைப் பிரச்சினை ஒருபோதும் காரணமாகவில்லை. இந்தப் பிளவானது ரணிலின் தலைமையில் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்று கட்சிக்குள் பரவிய கருத்தின் விளைவாகும். உண்மையிலேயே இக் கருத்தானது ஐ.தே.கவுக்குள் உருவானதல்ல. அது 1990 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ல.சு.க தலைவர்கள் மந்திரத்தைப் போல் அவதூறாக எப்போதும் கூறி வந்த கருத்தாகும். அது பின்னர் ஐ.தே.க ஆதரவாளர்களையும் ஆட்கொண்டது.

இக் கருத்து சரியானதும் அல்ல. 1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகளாக சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவும் சிறிய பெரிய அத்தனை தேர்தல்களிலும் தோற்றது. ஆனால் 1994 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஐ.தே.க, 7 ஆண்டுகளில் ரணிலின் தலைமையில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலொன்றில் வெற்றி பெற்றது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழீழ விடுதலை புலிகள் வடக்கில் தேர்தலைப் பகிஷ்கரிக்க மக்களைத் தூண்டாதிருந்தால் வெற்றி பெறுவது ரணிலே. அந்தத் தேர்தலில் பெரும்பாலும் ரணிலை ஆதரிக்கவிருந்த மூன்று இலட்சம் வட மாகாண மக்கள், தேர்தலை பகிஷ்கரித்தனர். மஹிந்த ராஜபக்‌ஷ ஒன்றரை இலட்சம் வாக்குகளாலேயே அத்தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் தலைமையில் ஐ.தே.க, மஹிந்தவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை வெல்லச் செய்தது.

எனவே, ரணில் தலைமையில் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்ற கருத்துச் சரியானதல்ல. அதேவேளை அறிவுத் திறன் மற்றும் அமைப்புத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ரணிலை விட சஜித் சிறந்த தலைவரா என்பதும் இன்னமும் நிரூபனமாகாத விடயம். ஆனால் மக்கள் தொடர்பு விடயத்தில் ரணில் நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்குப் பின்னாலேயே இருக்கிறார். அவர் தமது கட்சியின் எம்.பிக்களுடனாவது சிரிப்பதில்லை என ரஞ்சன் ராமநாயக்க ஒரு முறை பகிரங்கமாவே கூறியிருந்தார்.

அதேவேளை, தலைமைத்துவப் பிரச்சினை எழுந்த போதெல்லாம் ரணில் ஏமாற்றுக்காரராகச் செயற்படுவதாகவும் கொழும்பு கறுவாக்காட்டு அகம்பாவத்தோடு செயற்படுவதாகவும் பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இவை தான் ரணிலின் பலவீனங்கள்.

ஆனால் ரணில், புலிகளையும் ஏமாற்றியவர் என்பதையும் மறந்துவிட முடியாது. 2002 ஆம் ஆண்டு அவர் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்பாடு கடலை உள்ளடக்கவில்லை. எனவே அந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதே கடற்படையினர் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தாக்கி அழித்தனர். அந்த ஒப்பந்தத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே கருணா அம்மான் புலிகளை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது. அது புலிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ‘சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு’ என்று குறிப்பிட்டு ரணில் சர்வதேச சமூகத்தை சமாதான திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். அதன் விளைவே 2006 ஆம் ஆண்டு 25 ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் புலிகளைத் தடை செய்தமை.

ரணில் இவற்றைத் திட்டமிட்டே செய்தாரா என்பது இன்னமும் தெளிவாகாத விடயம். ஆயினும், ஓர் அரசாங்கம் என்ற வகையில் இவ்வாறு பெற்ற பலன்களைத் தேர்தல்களின் போது தெற்கில் சந்தைப்படுத்திக் கொள்ளும் திறமை ரணிலுக்கோ ஐ.தே.கவுக்கோ இருக்கவில்லை.

அது மட்டுமல்ல, தமது கட்சியின் இரண்டாந்தர தலைவர்களும் ஆதரவாளர்களும் தம்மை விட்டு பிரிந்து கட்சியின் பெயர் பலகையும் தலைமையகமும் மட்டுமே தன்னிடம் இருக்கிறது என்பதை ரணில் விளங்கிக் கொள்ளவில்லை. அதனாலேயே அவரது தலைமையில் ஐ.தே.க தனியாகக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்தது.

அவரால் இதனை உணர முடியாவிட்டாலும் ஐ.தே.கவுடன் எப்போதும் இருந்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அதனை உணர்ந்தனர். எனவே அவர்களும் ரணிலை விடச் சிறுபான்மையினர் விடயத்தில் அக்கறையற்றவரான சஜித்துடன் இணைந்து கொண்டனர்.

அந்த விடயத்தில் ரணிலை விட சஜித் அக்கறையற்றவர் என்பது இம்முறை சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் மூலம் சிறுபான்மை கட்சிகளுக்கு ஆசனங்களை வழங்க மறுத்துவிட்டதன் மூலம் தெளிவாகிறது.

ஐ.தே.கவினதும் ஐ.ம.சவினதும் தற்போதைய நிலைமைக்கான காரணத்தை 2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க தோல்வியடையாவிட்டால் அக்கட்சி பிளவுபடும் சாத்தியங்களும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலோ பொதுத் தேர்தலிலோ தோல்வியடையும் சாத்தியங்களும் குறைவாகவே இருந்திருக்கும்.