புதிதாக உருவாகும் கோள்!

ஒரு புதிய இளம் கோள் உருவாகிக் கொண்டிருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இதன் கண்டுபிடிப்பில், பல நாடுகளைச் சேர்ந்த சாதாரண குடிமக்களும் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கோள் உருவாகும்போது விண் பொருட்கள், துகள்கள் மற்றும் வாயுக்கள் மிதமிஞ்சிய வெப்பத்துடன் ஒரு மையப் பகுதியில் குவிய ஆரம்பிக்கும். பார்ப்பதற்கு நடுவே துளை உள்ள ஒரு வட்டு போல இந்தக் காட்சி இருக்கும். இத்தகைய ஒரு காட்சியைத்தான் சர்வதேச முயற்சியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

‘அஸ்ட்ரோ பிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்’ என்ற ஆய்விதழில், இந்த இளம் கோளுக்கு ஏ.டபிள்யு.10005X3எஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘சிவப்பு குள்ள நட்சத்திர’ வகையை சேர்ந்ததாக கருதப்படும் இந்தக் கோள், வழக்கத்திற்கு மாறாக, 45 மில்லியன் ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சராசரியாக ஒரு புதிய கோள் உருவாக, 30 மில்லியன் ஆண்டுகளே பிடிக்கும். ‘கரினா’ நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் இந்த கோள் மிகப் பழமையானதும் கூட என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.