கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் பாடாய்படுத்துகிறது. கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அனைத்து நாடுகளும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியே தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பல மாதங்களாக இந்த ஊரடங்கை அமல்படுத்தி வருவதால் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த தொடர் ஊரடங்கு நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் பாதித்து உள்ளது.
எனவே பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் மொத்தமாக ஊரடங்கை நீக்கி உள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இப்படி ஊரடங்கை தளர்த்தும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அதன் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசர அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும். ஊரடங்கை தளர்த்துவதில் தீவிரம் காட்டும் நாடுகள் வைரஸ் பரவலை தடுப்பதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு சாத்தியமற்ற சமநிலை அல்ல.
நாடுகள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் 4 அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கொத்துகளாக வைரஸ் செழித்து வளர்கிறது; பாதிப்புக்குள்ளாகும் குழுக்களை பாதுகாத்தல்; மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தனித்தனியாக நடவடிக்கை எடுக்கின்றனர்; மேலும் தொற்றுக்குள்ளானவர்களை கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், பரிசோதித்தல் மற்றும் கவனித்தல், அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று நாடுகளின் சுகாதார அமைப்புகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 105 நாடுகள் பதிலளித்து உள்ளன. இந்த ஆய்வில் பதிலளித்த 90 சதவீத நாடுகளும், கொரோனா தொற்றால் தங்கள் சுகாதார அமைப்பு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து உள்ளன. மேலும் வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
70 சதவீத நாடுகள் இடையூறுகள் குறித்து தெரிவித்து உள்ளன. ஆய்வில் பங்கேற்ற கால்பங்கு நாடுகள் தங்கள் அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளன. கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வு, தற்போதைய கொரோனா போன்ற சூழலை எதிர்கொள்வதற்கு சிறந்த சுகாதார அமைப்பை வைத்திருக்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.