மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(31) காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம் பெற்றது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன்?,இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சையம் வெளி வரும்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே,சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும்,காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் காலை 11.30 மணியளவில் போராட்டம் இடம் பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,மத தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.