ஈழத்தின் புகழ்பெற்ற மூத்த ஓவியர் ‘ஆசை இராசையா’ காலமானார்

ஈழத்தின் மூத்த ஓவியரும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவருமான ஆசை இராசையா இன்று (29) தனது 74வது வயதில் காலமானார்.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் இவர் காலமானார்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்டவர் ஆசை இராசையா. இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார்.

அத்துடன் இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவராகவும் இருந்தார். அரசின் 8 முத்திரைகளுக்கான ஓவியங்களை இவரே வரைந்துள்ளார்.

இதன்படி சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ஈ.பி. மல்லசேகர ஆகியோரின் மெய்யுருக்களையும் தவலம் என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம், இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம் என்பவற்றையே முத்திரைகளுக்காக வரைந்துள்ளார்.