ஆட்சியில் முக்கிய அதிகாரத்தில் இருந்த வட கொரிய அதிபரின் சகோதரி திடீரென மாயமாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான தகவலில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்குக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி நாட்டின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாகவும் அண்டை நாடான தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் திடீரென பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்று வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
மேலும் அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டன. இந்த நிலையில், வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் திடீரென மாயமாகி விட்டதாக நேற்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து ஊடகங்கள் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் அதிபர் கிங் ஜாங் உன்னுடன் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சகோதரி கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றவில்லை.
ஆகஸ்ட் 25-ந் திகதி நடந்த கட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு நம்பிக்கை துரோகம் செய்ததாக அதிபர் கிம் ஜாங் உன்னின் தாய் மாமனும், துணை அதிபருமான ஜங் சங் தக் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதுபோன்ற நிலைமை தனக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் கிம் யோ ஜாங் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.