ஜனநாயக நாடொன்றில் வாக்களிப்பது எந்தளவுக்கு அடிப்படை உரிமையாக ;இருக்கின்றதோ அதே போன்று நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது ஜனநாயக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாடெங்கினும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. இம்முறை தேர்தலில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள், 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் நிராகரிக்கப்பட்டிருந்தன. கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 81,031 வாக்குகளும் கம்பஹாவில் 75,509 வாக்குகளும் கண்டி மாவட்டத்தில் 57,091 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருந்தன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இது 6.3 வீதமாக உள்ளது.
வாக்களிப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதற்குக் காரணம் என கூறி விட முடியாது. ஏனெனில் தபால்மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளிலும் கணிசமானவை நிராகரிக்கப்பட்டிருந்தன.
அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதில் குழப்பம் இருப்பதாகக் கூறி விடய முடியாது. ஆகவே நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பும் காரணமாக இருக்கலாம். அதாவது இம்முறை தேர்தலில் போட்டியிட்ட எவரையும் தெரிவு செய்ய விருப்பமில்லாத மனநிலையைக் கொண்டவர்கள் தமது வாக்கை யாருக்கும் அளிக்காது நிராகரித்திருக்கலாம்.
இவ்வாறு எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாத மனநிலையை வெளிப்படுத்துவதற்கு சில நாடுகளில் வாக்களிக்கும் முறையொன்று உள்ளது என்பது முக்கிய விடயம். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் போது இது குறித்து நாம் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தோம். அதில் இந்தியாவில் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தில் உள்ள NOTA (Non Of the above) மேலே உள்ள எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்த அந்த பொத்தானை அழுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த முறை பெருவெற்றியை அளித்துள்ளது. சில மாவட்டங்களில் வேட்பாளர் ஒருவர் பெறும் வாக்குகளை விட இந்த நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது முக்கிய விடயம். இந்தியா மட்டுமின்றி ஆசியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் , ஐரோப்பாவில் பல நாடுகளும் இலத்தீன் அமெரிக்காவில் பிரேசில் ,கொலம்பியா ,சிலி போன்ற நாடுகளும் இந்த முறையை தேர்தல்களில் அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜனநாயக நாடொன்றில் வாக்களிப்பது எந்தளவுக்கு அடிப்படை உரிமையாக இருக்கின்றதோ அதே போன்று நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது ஜனநாயக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால் இதன் மூலம் சிறந்த, நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதற்கும் ஏனையோரை நிராகரிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பது பொதுவான கருத்தாகும்.
இந்தியாவில்
எமது அண்டைய நாடான இந்தியாவில் இம்முறை மக்களை கவர்ந்துள்ளது. தமது தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மண்கவ்வ வைத்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற 16 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் முதன் முறையாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி 543 தொகுதிகளில் சுமார் 60 இலட்சம் வாக்குகள் வரை நோட்டாவாக பதிவாகியிருந்தமை முக்கிய விடயம்.
இவ்வாண்டு தமிழகத்தில் இடம்பெற்ற மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் சுமார் 5 இலட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. இத்தேர்தலில் போட்டியிட்ட மூன்று முக்கியமான கட்சிகள் பெற்ற வாக்குகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தமை முக்கிய விடயம். அதாவது எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற தெரிவை 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் தெரிவு செய்திருந்தனர்.
அதேவேளை ஒரு தொகுதியில் அதிகபட்சமாக மக்கள் நோட்டாவை தெரிவு செய்திருந்தால் அங்கு மீண்டும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சிலர் அப்போது கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்தியாவின் தேர்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஒரு தடவை இதை வலியுறுத்தியிருந்தார்.
2014 மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டின் நீலகிரியில் அதிகபட்சமாக 46 ஆயிரத்து 500 வாக்குகள் நோட்டா பொத்தானை மக்கள் அழுத்தியதன் மூலம் பெறப்பட்டிருந்தன. வெற்றி பெற்ற முதல் இரண்டு பேருக்கு அடுத்ததாக மூன்றாவது அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.
அதாவது நோட்டா ஒரு வேட்பாளராக இருந்திருந்தால் இத்தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும். இது பெரிதும் பேசப்பட்ட விவகாரமாயிற்று.
இலங்கையில் சாத்தியப்படுமா?
இலங்கையில் இந்த முறையை தேர்தல் வாக்குச்சீட்டில் உள்ளடக்க வேண்டும் என பல சிவில் அமைப்புகள் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் அது குறித்து தேர்தல் ஆணைக்குழு அக்கறை செலுத்தவில்லை. எனினும் எதிர்வரும் தேர்தல்களில் இந்த முறை அமுல்படுத்தப்பட்டால் சில வேளைகளில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை குறைவடையலாம். மக்களின் மனநிலையை அரசாங்கங்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் . ஏனென்றால் தற்போதைய முறையில் நிராகரிக்கப்படும் வாக்குள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு வாக்களிக்கத்தெரியவில்லை என்ற கருத்துக்களையே அதிகம் பரவச்செய்துள்ளது.
சிவலிங்கம் சிவகுமாரன்