அவுஸ்ரேலியா புகலிடக்கோரிக்கையாளரின் மனு நிராகரிக்கப்பட்டது

பப்புவா நியூகினியின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 590 புகலிடக் கோரிக்கையாளர்களை, அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பி வைப்பதுடன்,அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களில் 590 புகலிடக் கோரிக்கையாளர்களும் கையெழுத்திடாததினால் அவை செல்லுபடியாகாது என்று ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் வாதாடிய ப்புவா நியூகினி சட்டத்தரணிகள் குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைச் சந்திப்பதற்கு அரசு அனுமதியளிக்காத காரணத்தாலேயே தம்மால் அவர்களது கையெழுத்தைப் பெற முடியாது போனதாக புகலிடக்கோரிக்கையாளர்கள் சார்பில் வாதாடிய சட்டத்தரணி Ben Lomai தெரிவித்தார்.

இதேவேளை தமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை கவலையளிக்கின்ற போதிலும் மீண்டும் அனைத்துப் புகலிடக்கோரிக்கையாளர்களினதும் கையெழுத்துக்களைப் பெற்று புதிய மனு தாக்கல் செய்யப்படுமென Ben Lomai கூறியுள்ளார்.