அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரம் ஆகும். இங்கு பிரெண்ட் ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குள்ள ஒரு இடத்தில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர்கள் தோண்டியபோது, அதில் 2 தங்க கட்டிகளை கண்டெடுத்தனர்.
அந்த கட்டிகள் இரண்டும் சேர்த்து 3½ கிலோ எடை இருந்தன. அவற்றின் மதிப்பு 2½ லட்சம் அமெரிக்க டொலர் (சுமார் ரூ.1 கோடியே 87 லட்சம் ரூபாய்) ஆகும்.
இது குறித்து ஈதன் வெஸ்ட் கூறுகையில், இவை நிச்சயமாக மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஒரே நாளில் இரண்டு பெரிய தங்க கட்டிகள் கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டி.வியில் சன் ரைஸ் என்ற நிகழ்ச்சியில் தோன்றிய பிரெண்ட் ஷானன், நாங்கள் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தோம். இந்த கட்டிகள் இதுவரை தோண்டப்படாத இடத்தில் இருந்து கிடைத்தன என்று கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal