தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களின் சுய அடையாளத்தை அழித்தொழிக்கும் நடைமுறைகள் நிறைந்திருக்கும் சமூகத்தை நோக்கிய தவிர்க்க முடியாத, நேர்மையான கேள்விகளை முன்வைக்கிறது இந்த துருக்கித் திரைப்படம்.
பெண்களைவிட ஆண்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மையுடன் செயல்படும் துருக்கி போன்ற நாட்டில் இத்தகைய கேள்விகளை எழுப்பும் படத்தைத் துணிச்சலுடன் உருவாக்கியிருக்கிறார் எர்குவேன் எனும் அறிமுகப் பெண் இயக்குநர். 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்தப் படம் பெண்ணியப் படங்களில் முக்கியமானது.
விளையாடுவது குற்றமா?
அது ஓர் இளவேனில் காலம். துருக்கியின் உட்பகுதியில் உள்ள சிற்றூர்தான் கதைக் களம். இஸ்தான்புல் நகருக்கு மாற்றலாகிச் செல்லும் தன் ஆசிரியையைப் பிரிய மனமின்றித் தேம்பியழும் லாலேயின் கண்ணீரில் படம் தொடங்குகிறது. பெற்றோரை இழந்த ஐந்து சகோதரிகள் அங்கு மாமாவின் வீட்டில் பாட்டியுடன் வசிக்கின்றனர். ஒரு நாள் பள்ளிக்குச் சென்று திரும்பும்போது ஆண் நண்பர்களுடன் கடலில் விளையாடுகின்றனர். அந்தக் குற்றத்துக்காகப் பள்ளி செல்வது தடைசெய்யப்பட்டு அவர்கள் வீட்டினுள் அடைக்கப்படுகின்றனர்.
அதன்பின் அவர்களின் வீடு அவர்களைத் திருமணத்துக்குத் தயார் செய்கிறது. முதல் இரண்டு பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடக்கிறது. மூன்றாவது பெண் திருமணத்துக்கு முன் தன்னை மாய்த்துக்கொள்கிறாள். பத்து வயது நிரம்பிய லாலே, நான்காவது பெண்ணைக் காப்பாற்றி இஸ்தான்புல் அழைத்துச் செல்கிறாள். அங்கு அவள் ஆசிரியையைச் சந்தித்து வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகிறாள்.
சமூகத்தின் அவலம்
சாதாரணமாகத் தோன்றும் இந்தக் கதைக்குள் ஒரு வாழ்வை உயிரோட்டத்துடன் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர். சுதந்திரமாகப் பள்ளி சென்றுவந்த சிறுமிகள் மாணவர்களுடன் விளையாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் மகிழ்ச்சி, சுதந்திரம், கனவு என எல்லாமே அவர்களிடமிருந்து ஒரே நாளில் பறிக்கப்படுகிறது; அவர்களின் கன்னித்தன்மையை உறுதிசெய்யும் பரிசோதனை நடத்தப்படுகிறது; பின் வரிசையாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது; திருமணத்துக்கு மறுநாள் படுக்கை விரிப்பில் அவர்களின் கன்னித் தன்மை சோதிக்கப்படுகிறது. சமூகத்தில் நிலவும் அவலங்களை இதைப் போன்ற காட்சிகள் இயல்பாக உணர்த்திச் செல்கின்றன.
இயலாமையும் கோபமும்
சிறுமிகள் அந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது; அது மனசாட்சியை உலுக்குகிறது. கன்னித் தன்மையை நிரூபிக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது மருத்துவர் சொல்லாமலே சோதனைக்கு ஒத்துழைப்பதில் அவர்களது இயலாமையும் கோபமும் ஒருங்கே வெளிப்படுகின்றன. வீட்டுக்கு வந்தவுடன், “இதற்கு உண்மையிலேயே தவறு செய்திருக்கலாம்” என்று அவர்கள் கசப்பாகச் சிரித்தபடி சொல்கிறார்கள். பாலியல் ஒழுக்கம் பற்றிப் பேசும் வளர்ப்பு மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமியின் தற்கொலை, சமூகத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
நம்பிக்கை ஒளி
சுதந்திரம் என்பது சிறகுகளை வெட்டி, தங்கக் கூட்டில் அடைத்துவைத்து, வேண்டியதைக் கொடுப்பதல்ல. அது வெளியில் பறக்கவிட்டுத் தனக்கு வேண்டியதைத் தானே தேடி எடுத்துக்கொள்ளச் செய்வதில் உள்ளது. விண்வெளிக்குப் பெண் செல்ல ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், இன்றும் பெண் கல்வியை மறுக்கும் பல நாடுகள் உலகில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் பிரிவின் கண்ணீரில் தொடங்கி நம்பிக்கையின் ஒளியோடு முடியும் ‘முஸ்டாங்க்’ போன்ற படங்கள் காலத்தின் தேவை.