கரோனா வைரஸ் மற்றும் புயல் தொடர்பாக வடகொரிய அதிகாரிகளுக்கு அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, கரோனா பரவல் மற்றும் வடகொரியவைத் தாக்கவிருக்கும் புதிய புயல் குறித்து அதிகாரிகளிடம் கிம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில், “வடகொரிய அதிகாரிகளுடன் இணைந்து கிம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது கிம் கையில் சிகரெட் வைத்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கிம் அதிகாரிகளுடன் என்ன ஆலோசித்தார் என்ற முழுமையான தகவல் வெளியாகவில்லை.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முன்பு தகவல் வெளியானது.
இது தொடர்பான தகவலை தென்கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் டே ஜங்கின் உதவியாளராக இருந்த சாங் சங் மின் வெளியிட்டார். ஆனால், இந்தத் தகவலை வடகொரியா மறுத்தது. இந்த நிலையில் கிம் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம் ஆண்டு அதிபராக வந்த கிம், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியைத் தவிர்த்தார்.
இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கிம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Eelamurasu Australia Online News Portal