வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா உதவி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்திருக்கிறது.

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் காரணமாக மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். குறிப்பாக பலரும் தமது வருமானங்களை இழக்கவேண்டியேற்பட்டது. இது சாதாரண மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குக் கூட இடர்ப்பட வேண்டிய சூழ்நிலையைத் தோற்றுவித்தது.

அனுராதபுர மாவட்ட செயலாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்குவதற்கு சர்வதேச குடிப்பெயர்வு தொடர்பான அமைப்பின் இலங்கை அலுவலகம் தீர்மானித்திருக்கிறது.

அதன்படி அனுராதபுரத்திலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் நேற்று திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக அவ்வமைப்பு தெரிவித்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை இழப்பு காரணமாக தமது குடும்பத்தவருக்கு உணவளிப்பதற்குக் கூட மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாகவும் சர்வதேச குடிப்பெயர்வு தொடர்பான அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்பிய 200 பேருடைய குடும்பங்கள் மற்றும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மேலும் சில குடும்பங்களுக்கும் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அநாதை இல்லங்களில் வசிப்போர், விசேட தேவையுடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சுமார் 800 பேர் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.

‘கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்பிற்குள்ளான அனுராதபுரத்தைச் சேர்ந்த குடும்பங்களின் உணவு மற்றும் சுகாதாரத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான இந்த ஆக்கபூர்வமான திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்’ என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.