வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து மாறுபட்ட தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுப்பவர் கிம் ஜாங் அன் என்பதையே அவரை பற்றிய செய்திகள் உணர்த்தும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. ‘கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்’; ‘கிம் உயிரோடு இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்றெல்லாம் செய்திகள் உலவிவந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நடைபெற்ற, ‘வடகொரியாவின் தந்தை’ என போற்றப்படும் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் கிம் கலந்துகொள்ளவில்லை.
2011-ம் ஆண்டு வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இந்த நிகழ்வில் தவறாமல் பங்குகொள்ளும் கிம், இந்த ஆண்டு பங்கேற்கவில்லை என்ற செய்தி, அவர் உடல்நிலை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியது.
எனினும் ஏப்ரல் மாத இறுதியில் கிம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டது. இதன் மூலம் கிம் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ‘சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை’ என்று தென்கொரிய புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனிடையே கிம் தன்னுடைய பொறுப்புகளில் சிலவற்றை தனது தங்கை கிம் யோ ஜாங்கிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய தலைவர் கோமாவில் இருக்கிறார்” என்று கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சாங் சங் மின் இது குறித்து அவர் கூறுகையில் “வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கோமாவில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
அதேசமயம் வடகொரியா விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர்.
அண்மையில் வட கொரியா சென்று வந்த சர்வதேச பத்திரிகையாளர் ராய் காலே, கிம் இறந்துவிட்டார் என்று தான் நம்புவதாக கூறினார்.
கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட தகவல்கள் அங்கு ஏதோ பெரிய விஷயம் நடப்பதை உணர்த்துவதாக ராய் காலே தெரிவித்தார். மேலும் கிம் ஜாங் அன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னரே அவரது இறப்பு முறையாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ராய் காலே கிம்மின் சகோதரி தலைவர் பொறுப்பை ஏற்கும்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்படும் என கூறினார்.