மேற்கு இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலையானது ஞாயிற்றுக்கிழமை குமுறத் தொடங்கியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள சினாபுங் என்ற எரிமலையே இவ்வாறு குமுறத் தொடங்கியுள்ளதாகவும், அதன் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 1,000 மீட்டர் (3,280 அடி) க்கும் அதிகமான புகை மற்றும் சாம்பலை காற்றில் இந்த எரிமலை வெளியேற்றியுள்ளது, மேலும் சூடான சாம்பல் மேகங்கள் தென்கிழக்கில் ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவு பயணித்ததாகவும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
எரிமலையின் வாயிலிருந்து 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் இடம்பெயருமாறும் கிராமவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலையின் ஆபத்து குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை புகை மற்றும் சாம்பலினால் விமானப் பயணம் பாதிக்கப்படவில்லை என்று இந்தோனேஷிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த எரிமலைக் குமுறுல் காரணமாக இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் சினாபுங் எரிமலையைச் சுற்றியுள்ள வீடுகளிலிருந்து சுமார் 30,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2,600 மீட்டர் (8,530 அடி) உயர் கொண்ட சினாபுங் எரிமலை 2010 இல் வெடிப்பதற்கு முன்பு நான்கு நூற்றாண்டுகளாக செயலற்று இருந்தது
2010 இல் இரண்டு பேர் உயிரிழந்தனர், 2014 இல் ஏற்பட்ட மற்றொரு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர், 2016 ஆம் ஆண்டு வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் 120 க்கும் மேற்பட்ட ஆபத்தான எரிமலைகளில் சினாபுங் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal