சென்னையின் வரலாற்றை எப்போது எழுதப்போகிறது தமிழக அரசு?

ஆகஸ்ட் 22: சென்னை தினம்

இந்தியாவின் பெருநகரங்களுள் ஆறாவது இடத்தில் இருக்கிறது தமிழகத்தின் தலைநகரமான சென்னை. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார, கலாச்சார மையமாக விளங்கும் சென்னைப் பெருநகரத்துக்கு மாநில அரசின் சார்பில் அதிகாரபூர்வமான ஒரு விவரச் சுவடி வெளியிடப்படவில்லை என்பது நமது வரலாற்று ஆர்வமின்மைக்கு ஓர் உதாரணம்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சோழ மண்டலக் கடற்கரையில் கோட்டை கட்டுவதற்காக நிலம் வாங்கிய ஆகஸ்ட்- 22ம் தேதியை சென்னை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறோம். சென்னை நகரப் பகுதிக்கு 2,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு உண்டு என்று கொற்றலையாற்றின் கரைகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகளை ஆதாரம் காட்டுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். எனினும், சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட பிறகே, நவீன இந்திய வரலாற்றில் சென்னையின் முக்கியத்துவம் அதிகமானது.
முதன்முதலில், கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாகச் செயல்பட்டது சென்னை கோட்டைதான். அதன் பிறகே கொல்கத்தாவும் புது டெல்லியும் பிரிட்டிஷாரின் தலைநகரங்களாயின. கொல்கத்தாவுக்கும் புது டெல்லிக்கும் விரிவான வரலாற்று நூல்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், சென்னை நகருக்கு அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விவரச் சுவடிகளை வெளியிட வேண்டியது தமிழக அரசின் ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்றுத் துறையின் பொறுப்பு. ஆனால், இன்னமும் பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதிய மாவட்ட விவரச் சுவடிகள்தான் மறுபதிப்பு செய்யப்பட்டுவருகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக, பொருளாதார நிலைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அரசு ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்த்துக்கொள்ளும் வாய்ப்பை மாவட்ட விவரச் சுவடிகள் அளிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இந்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டும்தான் விதிவிலக்கு.

‘மெட்ராஸ் கெஸட்டியர்ஸ்’ என்ற தலைப்பில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மாவட்ட விவரச் சுவடிகளை வெளியிட்டார்கள். ஆனால், அப்போதைய மெட்ராஸ் மாவட்டத்துக்கென்று அவர்கள் எந்த விவரச் சுவடியையும் வெளியிடவில்லை. இப்போது சென்னைப் பெருநகரத்தின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ ஆய்வுகளைச் செய்யவோ முத்தையா, நரசய்யா போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய புத்தகங்களின் வாயிலாகத்தான் முடியும். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் புலங்களிலிருந்து ஆர்வமும் அனுபவமும் கொண்ட வரலாற்று ஆய்வறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, ஆவணக் காப்பகங்களில் உறங்கும் ஆவணங்களைத் தேடியெடுத்து சென்னை மாநகரத்தின் வரலாற்றை விரிவாக எழுத வேண்டும். சென்னை தினக் கொண்டாட்டம் என்பது வெறும் நன்றியறிதலாக மட்டுமல்லாமல், வரலாற்றுப்பூர்வமாகவும் அர்த்தம்பெறுவது எப்போது?

கவனகன்