ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்காக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம், ஆஸ்திரேலியாவின் Yongoh Hill குடியேற்றத் தடுப்பு மையத்திலிருந்து கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு 15 பேர் மாற்றப்பட்டிருந்தனர்.
முதலில் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றுவதற்கான முயற்சி மையத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு அடுத்த நாளே தீவு முகாமிற்கு மாற்றப்படுபவர்களுக்கு மேலோட்டமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல். ஆனால், இதில் கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் வெறுமனே உடல் வெப்பநிலை, ரத்த அழுத்த நிலை மட்டுமே பார்க்கப்பட்டதாகவும் கூறுகிறார் ரிண்டோல்.
“பொது சுகாதார மற்றும் மன நலக் காரணங்களுக்காக குடியேற்றத் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என பெருமளவில் விடுக்கப்பட்ட மருத்துவ ரீதியான கருத்துகளை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார் ரிண்டோல்.
குடியேற்றத் தடுப்பில் உள்ளவர்களை கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு இடம்மாற்றுவதற்காக ஆறு மாதங்களில் 55.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவாகும் என செனட் கமிட்டியிடம் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய எல்லைப்படை ஆணையர் மைக்கேல் அவுட்ரம்.
மீண்டும் திறக்கப்படும் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு 250 பேர் மாற்றும் முயற்சியை நியாயப்படுத்தியுள்ள ஆணையர், உள்ளூர் தடுப்பு மையங்களை எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க இந்நடவடிக்கை அவசியமானது என்கிறார்.
கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமின் பின்னணி:
ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள North West Point தடுப்பு முகாம் அமைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 2018ல் ஆஸ்திரேலிய அரசால் மூடப்பட்ட North West Point தடுப்பு முகாம், 2019ம்ஆண்டில் திறக்கப்பட்ட போதும் அங்கு எவரும் சிறைவைக்கப்படவில்லை.
கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்பட்ட சமயத்தில், கடந்த பிப்ரவரி மாதம் சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆஸ்திரேலியர்களை தனிமைப்படுத்துவதற்கான இடமாக இந்த முகாம் பயன்படுத்தப்பட்டது.
இப்படியான சூழலில், இம்முகாமை திறப்பதற்கான முயற்சியினை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். பெருந்தொற்று
சூழலிற்கு நடுவில் தடுப்பில் உள்ளவர்களை இடம் மாற்றுவது மேலும் சுகாதார நெருக்கடியை அதிகரிக்கும் என அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.