அவுஸ்ரேலிய தீம் பார்க்கை திறப்பதில் மேலும் தாமதம்

அவுஸ்ரேலியாவில் நான்கு பேரை பலிகொண்ட தீம் பார்க்கை மீண்டும் திறக்கும் முடிவுக்கு காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் மேலும் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ‘டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது.

இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ‘தண்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குகைகள் மற்றும் மரப்பாலங்களை கடந்து ஆறுபேர் அமர்ந்து செல்லும் பரிசல் சவாரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இந்த பரிசல் சவாரியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து அந்த தீம் பார்க் மூடப்பட்டது. இவ்விபத்தை தொடர்ந்து தீம் பார்க்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதை தீம் பார்க் நிர்வாகம் விளக்கியது.

அத்துடன், வெள்ளிக்கிழமை மீண்டும் பூங்காவை திறக்க முடிவு செய்தனர். அன்றைய தினம், விபத்தில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பொதுமக்களை அனுமதிக்க முடிவு செய்து, இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் நாளில் கிடைக்கும் லாபத்தை அறக்கட்டளைக்கு வழங்குவதுடன், சிறிய வகை சவாரிகள், விலங்குகளை கவரும் நிகழ்ச்சிகள் மற்றும் தண்ணீர் பூங்கா ஆகியவை மட்டுமே செயல்படும் என கூறப்பட்டது.

காவல்துறை தரப்பில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இந்த வாரம் பூங்காவை திறக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது. எனவே, பூங்காவை திறக்கும் முடிவினை நிர்வாகம் கைவிட்டது. மேலும் சில நாட்கள் பூங்கா மூடப்பட்டிருக்கும்.