பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி ’கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ’பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரணியம் ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
1966-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 1969-ம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்ற மனதை மயக்கும் மெல்லிசை பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.
பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான அடிமைப்பெண் படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தமிழில் பரபரப்பான பாடகராக வலம்வந்த எஸ்.பி.பி., பலமொழிகளில் மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கு பின்னணி பாடியுள்ளார்.
சிறந்த பாடகராக ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆந்திர மாநில அரசின் பெருமைக்குரிய நந்தி விருதுகளை 25 முறையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான விருதுகளை 4 முறையும், கர்நாடக அரசின் சிறந்த பாடகருக்கான விருதுகளை 3 முறையும் பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அரசின் மிகவும் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி., திரை இசைத்துறையில் படைத்த சாதனையை பாராட்டி சங்கீத கங்கா விருது, லதா மங்கேஷ்கர் விருது ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளன.
இவரது குரலில் வெளியாகியுள்ள மிகச்சிறந்த பாடல்களை பட்டியலிட முயன்றால், ஒருமாதாமாவது தேவைப்படும் என சில இசை விமர்சகர்கள் கூறுவதுண்டு.
40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியதற்காக ’கின்னஸ்’ புத்தகத்தில் இனி எவராலும் அழிக்க முடியாதபடி இடம்பெற்றுள்ள எஸ்.பி.பி.,யின் திரை இசைப் பயணம் தற்போது ஐம்பதாவது ஆண்டை அடைந்துள்ளது.
இந்நிலையில், ரஷிய தலைநகரான மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் சார்பில் தீபாவளி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பங்கேற்று பாடும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘படவா’ கோபி மற்றும் அவரது நண்பரான விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். எஸ்.பி.பி சரண், எஸ்.பி.ஷைலஜா, மாளவிகா ஆகியோரும் இந்த இசைப்பயணத்தில் இணைகின்றனர்.
ரஷியாவில் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்துவந்தாலும், தமிழர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ், இந்தி உள்ளிட்ட பாடல்கள் கலவையாக இடம்பெறும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள எஸ்.பி.பி., சில ரஷிய மொழி பாடல்களையும் பாடி அந்நாட்டு மக்களை 4 மணிநேரம் மகிழ்விக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஒத்திகையில் அவர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
வழக்கமாக ஏதாவது ஒரு இசைக்குழுவை சேர்ந்த இசைக்கலைஞர்களுடன் கச்சேரிகளை நடத்தும் எஸ்.பி.பாலசுப்பிரணியம், கிரெம்ளின் நிகழ்ச்சிகாக சென்னை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மிகச்சிறந்த இசைக் கலைஞர்களை தேர்வு செய்து, உடன் அழைத்து செல்கிறார்.
‘படவா’ கோபி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.,யின் தமிழ் பாடல்களுக்கு நடனமாட ரஷியாவை சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாருக்கு பின்னர் மாஸ்கோவில் உள்ள ரஷிய அதிபர் மாளிகையில் இசைநிகழ்ச்சி நடத்தும் இந்தியாவின் இரண்டாவது இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரணியம், என்பது குறிப்பிடத்தக்கது.