அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள்!

அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதி சிங்கள மக்களின் அரசியலுடன் ஒப்பிடுவது மூடத்தனம். எமது அரசியல் என்பது அபிவிருத்தி மட்டும் இலக்காக கொண்டு செயல்படும் அரசியல் இல்லை. கடந்த 73, வருடங்களாக விடுதலைக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் எமது மண்ணில் எம்மை தாமே நிர்வகிக்கும் ஒரு அரசியல் தீர்வை மையமாக கொண்டு நீண்டகால உரிமைப்போராட்ட தடம்மாறாத கொள்கை அரசியல். சிலர் கூறுவது போன்று நாடாளுமன்ற தேர்தலை அல்லது மாகாணசபை தேர்தலை அல்லது உள்ளூராட்சி சபைதேர்தலை மட்டும் இலக்காக கொண்டு வாக்கு கேட்கும் தேர்தல் அரசியல் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியாளர்களும் ஆட்சியும் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் மாறும்போது தமிழ்தேசிய கொள்கைகளையும் மாற்றவேண்டும் அல்லது உரிமைக்கான செயல்பாட்டு அரசியல் தளத்தில் இருந்து நாமும் மாறவேண்டும் என பலர் நினைப்பது எம்மை நாமே பலவீனப்படுத்தும் நிலையாக மாறும். இப்போது ஆட்சியில் அமர்ந்த ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் அறுதி பெரும்பான்மை கொண்ட அரசு. அதனால் தமிழ்தரப்பு குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ்தேசிய அரசியல் செயல்பாட்டை உடைய தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமது கொள்கைகளை தளர்த்தி அரசுக்கு சார்பு நிலை அரசியலாக செயல்படவேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.

வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம், இருள் வெளிச்சம், மேடுபள்ளம், உயர்வு தாழ்வு, இனிப்பு கசப்பு, வெற்றி தோல்வி இருப்பதைப் போலவே அரசியலிலும் இவைகள் உண்டு இவைகளை பாடமாக படிப்பினையாக எடுத்து அடுத்த கட்டங்களுக்கு மக்களை வழிப்படுத்தி எமது உரிமைக்கான அரசியல் பயணத்தை தொடர்வதுதான் அரசியல் சாணாக்கியம். இவ்வாறு பல பின்னடைவுகளை கடந்த காலத்தில் எமது தலைவர்களான தந்தைசெல்வா அகிம்சை போராட்ட அரசியலில் எதிர்கொண்டார். இதைப்போலவே தலைவர் பிரபாகரனும் ஆயுதப்போராட்ட அரசியலில் பல பின்னடைவுகளை எதிர்கொண்டார். அதே நிலையில் தற்போது சம்பந்தன் ஐயாவும் இராஜதந்திர அரசியலில் பின்னடைவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் எத்தனை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர்களை நியமித்தாலும் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வை இவர்களால் தரமுடியுமா? குறைந்தபட்சம் சுதந்திரமான வாழ்வை தரமுடியுமா? வடகிழக்கில் உள்ள நில ஆக்கிரமிப்பை இவர்களால் தடுத்து நிறுத்தமுடியுமா?
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தொல்பொருள் ஆய்வு நடவடிக்கையை தடுக்கமுடியுமா ? சிந்தியுங்கள். சில அபிவிருத்திகளை எமது வரிப்பணத்தில் இருந்து பெற்றுத்தர மட்டுமே இவர்களால் முடியும் இதுவா எமது உரிமை இதற்காகவா இத்தனை உயிர்களை பறிகொடுத்தோம் இப்படி அவர்களுக்கு வாக்களித்த மக்களே கேட்கும் காலம் விரைவில் வரும்.

இப்போது தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை மூடிமறைத்து அரசியலைமைப்பு சட்டங்களாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 13,வது அரசியல் யாப்பு 19,வது அரசியல் யாப்பை தமது அரசுக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு மாற்றுவதால் மட்டும் எல்லமே சரிவந்து விடும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி செய்வதால் இந்த நாடு மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கே இட்டுச்செல்லும் என்பது உண்மை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பால் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் போன்ற பல விடயங்களை தடுத்து நிறுத்திய விடயங்களை தற்போது இந்த தேர்தலில் வெற்றிபெற்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகளால் தடுக்க முடியுமா எதிர்க்க முடியுமா? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

வெறுமனமே தமிழ்தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தோம் என்று கூறும் நபர்கள் முடிந்தால் வடக்கு கிழக்கில் எதிர்காலத்தில் ஆக்கிரமிக்கவுள்ள நில அபகரிப்பை பூரணமாக எதிர்த்து தடுக்க முடிந்தால் அதுதான் சமூக நன்மைக்கான அரசியல். அப்படி செய்யாமல் கண்டும் காணாதது போன்று செயல்படுவது சலுகை அரசியல். இந்த வித்தியாசத்தை மக்கள் உணரும் காலம் வெகுதூரமில்லை எனவும் மேலும் கூறினார்.