தமிழரசுக் கட்சியால் தமிழருக்கான உரிமையை வென்றெடுக்க முடியும் என்பது செல்வாவின் நம்பிக்கையாக இருந்தது! விடுதலைப் போராட்டத்தால் தனி ஈழம் அமைக்க முடியும் என்பது பிரபாகரனது நம்பிக்கையாக இருந்தது!
இராஜதந்திரத்தால் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இரா.சம்பந்தன் ஐயாவின் நம்பிக்கையாக இருந்தது. தற்போதைய தேர்தல் முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்காலிக பின்னடைவே அன்றி நிரந்தர பின்னடைவு இல்லை என, இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இந்த மூன்றும் ஒன்றன் பின் ஒன்றான கால ஓட்டத்தின் தொடர்ச்சிதான். இந்த ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்மக்கள் ஒருங்கிணைக்கும் புள்ளிக்கு எதிர் அரசியல் சித்தாந்தத்துடன் ஒரு பகுதியினர் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள். அது உலக வழக்கு, அதில் குற்றம் குறை சொல்ல ஏதுமில்லை. இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஒரு பின்னடைவை தந்துள்ளனர் என்பது உண்மை.
சம்பந்தன் ஐயாவின் இராஜதந்திர நம்பிக்கை இன்னமும் காலம் கடந்துவிடவில்லை, ஒற்றையாட்சி தாண்டி வெளியில் சிந்திக்க முடியாத நிலையில் பெரும்பான்மையும்; ஒற்றையாட்சி சாத்தியமேயில்லை என்கின்ற நிலையில் தமிழர் தரப்பும் இன்று இழுபறி நிலையில் இருக்கின்றது; இடையில் வடக்கு கிழக்கு இணைப்பில் வேறு முரண்பாடு. இந்நிலையில் தீர்வு என்பது எப்படி, என்ன விதத்தில் நிகழப் போகிறது? அப்படி ஒன்று நிகழுமா? என பல கேள்விகளுக்கு மத்தியில் தீர்வு இன்று உடனடிச் சாத்தியமற்ற ஒன்று என்பது தெளிவாக புரிகின்றது.
இந்த தேர்தல் முடிவுகள் குறிப்பாக தென்பகுதி மக்கள் கோட்டபாய அரசுக்கு வழங்கிய ஆணை கோடிட்டுகாட்டுகிறது. யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு தமிழ்தேசியம் பின்னடைவை சந்திக்கவில்லை. தமழ்தேசிய கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்தாலும் தமிழ்தேசியத்திற்கான வேறு இரண்டு கட்சிகள் ஆசனங்களை பெற்று மொத்தமாக யாழ் மாவட்டத்தில் ஆறு உறுப்பினர்கள் தமிழ்தேசிய அரசியலுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவுள்ளனர்.
ஆனால் கிழக்கை பொறுத்தவரை வழமையான ஒரு ஆசனம் திருகோணமலையில் கூட்டமைப்பு தக்க வைத்துள்ளது. தலைவர் சம்பந்தன் ஐயா வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய அரசியலுக்காக இரண்டு ஆசனங்கள் மட்டுமே அதுவும் எமது பட்டிருப்பு தொகுதியல் இருந்து மட்டும் தெரிவாகியுள்ளனர். பட்டிருப்பு தொகுதியில் இம்முறை மட்டுமல்ல கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் நானும்(பா.அரியநேத்திரன்) த.கனகசபை அண்ணருமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அது போலவே 2010, தேர்தலில் மீண்டும் நானும் பொ.செல்வராசா அண்ணருமாக இரண்டு பேரும் தெரிவாகினோம். ஆனால் 2015, தேர்தலில் மட்டும் பட்டிருப்பு தொகுதியில் இருந்து எவருமே தெரிவாகவில்லை. இதற்கு எமது கட்சியில் உள்ள சிலரின் எமக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொண்டமை காரணம் என்பதை பலமுறை தெரிவித்தோம். இருந்த போதும் இந்த 2020, தேர்தலில் இரா.சாணாக்கியன் மற்றும் கோ.கருணாகரம் ஆகிய இருவரும் தெரிவாகி மீண்டும் பட்டிருப்பு தொகுதியில் இருந்து மட்டும் கூட்டமைப்பின் மரியாதையை காப்பாற்றியுள்ளனர். இருந்த போதும் மட்டக்களப்பு தொகுதியில் கூட்டமைப்பு முன்னிலையில் வாக்குகளை பெற்றுள்ளது. ஆசனம் மட்டுமே கிடைக்கவில்லை.
கல்குடா தொகுதியில் கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொகுதியில் தமிழரசுகட்சி பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் வேட்பாளராகவும், இதே தொகுதியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டார். அதே வேளை தமிழரசுகட்சி வாலிபர் அணிதலைவர் கி.சேயோனும் கல்குடா தொகுதி என்பதும் எல்லோரும் அவதானிக்க வேண்டிய விடயம்.
இவ்வாறு முக்கிய உறுப்பினர்களுள்ள கல்குடா, தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சித் தலைவர் பிள்ளையானின் தொகுதியும் என்பது இங்கு நோக்கத்தக்கது. கல்குடா தொகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்தாலும் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பை விட எமக்கு எதிராக போட்டியிட்ட கட்சிகள் எம்மைவிட மொத்தமாக எல்லா கட்சிகளும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றனர்.
தாம் ஏறக்குறைய 79,000 வாக்குகளை மட்டுமே பெற்றோம், இது எமது கட்சிக்கான பின்னடைவு என்பது உண்மை. ஆனால் இது நிரந்தர தோல்வி அல்ல. இந்த தற்காலிக பின்னடைவுக்கான காரணங்களை நிவர்த்தி செய்யவேண்டியது எமது கூட்டுப்பொறுப்பு. ஒருவர் மற்றவர் மீது விரல் நீட்டாமல் யார் இதற்கு காரணம் என்பதை ஆராய்ந்து மீளவும் கட்சியை புனருத்தாரணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவு எமக்கு கோடிட்டு காட்டியுள்ளது.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இம்முறை தேர்தலில் இல்லாமல் போனமைக்கு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமை ஒரு காரணமாக கூட்டமைப்புக்கு எதிராக கருணா என்ற கருவியை சிலர் பயன்படுத்தியதால் எந்த ஒரு தமிழ் பிரதிநித்துவமும் அம்பாறைக்கு கிடைக்கவில்லை. ஆயினும் தற்போது தேசியபட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்ட த.கலையரசன் என்பவருக்கு வழங்கப்பட்டமை தமிழ் பிரதிநிதித்துவம் மீண்டும் அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பெறுபேறுகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தற்காலிக பின்னடைவே தவிர நிரந்தர பின்னடைவுகள் இல்லை எனவும் மேலும் கூறினார்.