அவுஸ்திரேலியாவில் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் தொழில்துறை நகரம்!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பாக இயங்கும் தொழில்துறை நகரம் ஒன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குடியிருப்புகளுக்கு அருகாமையில் இந்த ரசாயன கிடங்கு அமைந்துள்ளதால், பெய்ரூட் போன்ற பயங்கரமான வெடிவிபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இங்குள்ள மக்கள் உள்ளனர்.

லெபனானில் செவ்வாய்க்கிழமை 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்துள்ளனர், மேலும் 5,000 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

அதே சூழல் அவுஸ்திரேலியாவின் பரபரப்பாக இயங்கும் தொழில்துறை நரகம் ஒன்றிலும் தற்போது உருவாகியுள்ளது. சிட்னியின் வடக்கே நியூகேஸிலிலிருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் கூராகாங்கில் உள்ள ஓரிகா ஆலையில் சுமார் 12,000 டன் வரை அம்மோனியம் நைட்ரேட் இரசாயனம் சேமிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது வடக்கு ஸ்டாக்டனில் உள்ள புறநகர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெறும் 800 மீ தொலைவிலேயே அமைந்துள்ளது.

ஓரிகா ஆலையில் சின்னதாக ஒரு விபத்து ஏற்பட்டாலும், அது இங்குள்ள மொத்த மக்களையும் பாதிக்கும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடுமையான நெறிமுறைகள் பராமரிக்கப்பட்டு, எங்களின் தயாரிப்பு பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரான்சில் 2001 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஆலையில் சுமார் 300 டன் அம்மோனியம் நைட்ரேட் இரசாயனம் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆலையில் இருந்து ரசாயனத்தை அப்புறப்படுத்தவும், அல்லது இடம் மாற்றவும் சுமார் 300 பேர் கொண்ட குடியிருப்பாளர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற ஆபத்தான பொருளை தயாரித்து சேமித்து வைப்பதற்கு முற்றிலும் பொருத்தமற்ற இடம் இது என பல, பல ஆண்டுகளாக நாங்கள் புகார் அளித்து வருகிறோம் என அப்பகுதி மக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். நியூகேஸில் நியூ சவுத் வேல்ஸின் இரண்டாவது பெரிய நகரமாகும், இங்கு 322,000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இதேபோன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 300 டன் அம்மோனியம் நைட்ரேட் இரசாயனம் வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர் ஆனால் ஓரிகா ஆலையில் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் இரசாயனம் சேமிக்கப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டதும் 5,000 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.