சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது, சரியான முறையிலும் எடுக்க வேண்டும். இது, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானது.
பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தோன்றிய சர்ச்சைகள் மாத்திரமன்றி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கும் கூட, இது பொருத்தமுடையது தான். அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிட்டு வாக்குகளை உடைக்க, தமிழர்களுக்கு கிடைக்க கூடிய ஒரு ஆசனமும் அங்கு இல்லாமல் போனது.
இந்த நிலையில் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்தது. அது முற்றிலும் நியாயமானதும் கூட. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனைச் செய்திருந்தால், கிழக்கில் அதன் பலம் இன்னும் உயர்ந்திருக்கும் ஆனால், அந்தக் கட்சி செல்வராஜா கஜேந்தினுக்குக் கொடுத்து, தேர்தலில் தோல்வியடைந்தவர்களை பின்கதவால் அனுப்பும் வேலைக்கு பிள்ளையார் சுழியைப் போட்டது.
முன்னர் சுமந்திரன் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்ற போது அவரைப் பின்கதவால் வந்தவர் என்று குற்றம்சாட்டியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர். இனிமேல், அவர்கள் அப்படி கூறமுடியாது. அம்பாறைக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொடுத்திருந்தால், அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு ஆசனத்தை யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த சசிகலா ரவிராஜூக்கு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இந்தக் கோரிக்கையிலும் அதிகபட்ச நியாயம் இருந்தது. ஏனென்றால், வடக்கு, கிழக்கில் இருந்து எந்தவொரு கட்சியில் இருந்தும் ஒரு பெண் கூட நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. வடக்கு, கிழக்கில் 89 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகின்ற போதும், இந்தப் பகுதியில் இருந்து ஒரு பெண் வேட்பாளராவது வெற்றி பெற முடியவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும், மிக சொற்ப வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்ற அடிப்படையிலும், அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கொடுக்கப்படுவது நியாமானது. ஆனால்,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சசிகலா ரவிராஜ் நடந்து கொண்ட முறை கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தநிலையில் இன்னொரு யோசனையும் முன்வைக்கப்பட்டது, யாழ்ப்பாணத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு அந்த ஆசனத்தை வழங்க வேண்டும் என்பது. மாவை சேனாதிராசா தேசியப் பட்டியல் ஆசனத்தில் நாடாளுமன்றம் செல்லும் திட்டத்தில் இருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு சூழலை உருவாக்கியது, சுமந்திரனும் சிறிதரனும் தான். வாக்கு எண்ணிக்கை முடிந்து மறுநாள், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய சுமந்திரன், தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், செயலாளரும் தோல்வியடைந்து விட்டனர் என்றும், எனவே, கட்சியை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறியிருந்தார்
அதுபோல, சிறிதரன் தலைமைப் பதவியை எல்லோரும் சேர்ந்த தன்னிடம் தந்தால் ஏற்கத் தயார் என்று கூறினார். ஆக, தேர்தலின் போது சிறிதரன்- சுமந்திரன் இணை எவ்வாறு ஒன்றாக பிரசாரத்தை மேற்கொண்டது போலவே, கட்சியையும் கைப்பற்ற நினைக்கிறது என்ற கருத்து வலுப்பெற்றது. மாவை சேனாதிராசா தோல்வியடைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கட்சித் தலைவர் பதவியை அவரிடம் இருந்து பறிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுந்தது.
இந்தச் சூழலில், கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாக்க, மாவைக்கே தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்குள் அவசர அவசரமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம்.
அதற்குமுதல் நாள் இரவு சம்பந்தனின் இல்லத்தில் நடத்திய கூட்டத்துக்கு பின்னர், தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுமந்திரன் கூறினார். மறுநாள் காலையில் கலையரசன் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்படுகிறார். அந்த முடிவை எடுத்தது சம்பந்தன், சுமந்திரன் தான். அவசர அவசரமாக, கூட்டமைப்பின் பங்காளிகளுக்கும் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவு அது.
அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொடுக்க வேண்டும் என்பது எந்தளவுக்கு சரியான முடிவோ, அந்த முடிவை எடுத்த முறை 100 வீதம் தவறானது. சரியான சூழலில், எந்த உள்நோக்கமும் இல்லாமல், அம்பாறைக்குத் தேசியப்பட்டியல் ஆசனம் கொடுக்கப்பட்டிருந்தால், இந்தளவுக்கு சர்ச்சைகள் வந்திருக்காது. தவறான முறையில் இந்த முடிவை எடுக்கப் போனதால் தமிழ் அரகசுக் கட்சி மாத்திரமன்றி கூட்டமைப்பே இன்று இந்த விடயத்தில் பிளவுபட்டு நிற்கிறது.
தமிழரசுக் கட்சி தலைமையை ஒதுக்கி விட்டால் கூட, ரெலோ, புளொட்டுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அது தான் நியாயமானது. அது தான் கூட்டணி தர்மம். கடந்த காலங்களில் இவ்வாறான நியாயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கவில்லை. கூட்டணி தர்மம் பேணப்படவில்லை. கடந்த முறை இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்த போதும், அவையிரண்டையும், தானே வைத்துக் கொண்டது தமிழரசுக் கட்சி.
ஒரு ஆசனத்தை சுழற்சி முறையில் ரெலோவுக்கு வழங்குவதாக இணங்கியிருந்த போதும் அந்த வாக்குறுதிகளை கடைசி வரை காப்பாற்றவில்லை. ஏனைய முடிவுகளை எடுத்த போதெல்லாம், ரெலோவையோ புளொட்டையோ கலந்தாலோசிக்கவும் இல்லை. ;தமிழ் அரசுக் கட்சியே முடிவுகளை எடுத்தது. தீர்மானங்களை அறிவித்தது. தமிழரசுக் கட்சியில் கூட, சுமந்திரனும் சம்பந்தனும் தான் எல்லாவற்றையும் தீர்மானித்தார்கள். அப்போது, தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. தலையாட்டிக் கொண்டு போனார்கள்.
ரெலோவும் புளொட்டும் தேவையான நேரத்தில் தேவையான அழுத்தங்களை கொடுத்து, இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவில்லை. இவையெல்லாம், கட்சிக்குள் தான்தோன்றித்தனம் அதிகரிக்க காரணமாகி விட்டது. அது கட்சியின் தலைமையைப் பதம் பார்க்கும் அளவுக்கு, சென்று விட்டது. தேசியப் பட்டியல் ஆசனம் போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதில் கூட, கலந்தாலோசிக்காமல் செயற்படும் துணிச்சலைக் கொடுத்து விட்டது. இதெல்லாம் கடந்த காலங்களைப் போல இருந்து விடும் என்று சம்பந்தன் – சுமந்திரன் இணை நினைத்தால் அது தவறு.
இப்போது நிலைமை மாறி விட்டது. நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பிடம் இருந்த ஏக பிரதிநிதித்துவ அங்கீகாரம் போய் விட்டது. விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், மாத்திரமன்றி அங்கஜனும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக வரப்போகிறார். கூட்டமைப்புக்கு உள்ள 9 ஆசனங்களில் 4 ஆசனங்களை பங்காளிக் கட்சிகள் தான் வைத்திருக்கின்றன. அவை நினைத்தால், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்தால், நாடாளுமன்றத்தில் அவர்களின் பலம் 7 ஆகி விடும், தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களுடன் இன்னும் பலவீனமான நிலைக்கு தள்ளப்படும்.
இதையெல்லாம் யோசிக்காமல், கடந்த காலங்களில் இருந்த நிலையைப் போலவே இப்போதும் நடந்து கொள்ள முயன்றால், அது கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி தமிழரசுக் கட்சியையும் சிதைத்து விடும். என்னதான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு கஜேந்திரகுமார் சமஷ்டி பற்றிப் பேசினாலும், சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியைத் தான் இப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் அது ஒரு ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட கட்சி. அதுபோலத்தான் பலரும் தமிழரசுக் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். இது சமஷ்டியை கோரி, அகிம்சை வழியில் நம்பிக்கை வைத்த கட்சி. இவ்வாறான ஒரு கட்சியை வசப்படுத்திக் கொள்ளும் எண்ணம் சுமந்திரனுக்கு இருப்பது ஆச்சரியமில்லை. தன்னை ஒரு முழு அகிம்சாவாதியாக காட்டிக் கொள்ளும் அவர், ஒரு புதிய கட்சியை தனக்கென உருவாக்குவதை விட, தமிழரசுக்கட்சியை வளைத்துப் போடவே விரும்புகிறார். இதற்காகவே அவர் தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு காய்நகர்த்தலாக மேற்கொண்டார். ; ஆனால் அவர் சரியான நகர்த்தலை, சரியான நேரத்தில் மேற்கொண்டிருந்தாலும் கூட, சரியான முறையில் அதனை செய்யவில்லை. அதனால் தான் அவர், எல்லோரிடத்தில் இருந்தும் விலகி ;திரிசங்கு நிலை ;யில் இருக்கிறார்.
கபில்