தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு சரியானவர் தெரிவாகும் வரை தலைவர் பதவியில் இருந்து தற்போதைக்கு ரணில் விலகுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளதாக சிங்கள இணையத் தளம் ஒன்று தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத் தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்து இருக்கக்கூடிய தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக ரணிலை நாடாளுமன்றம் செல்லுமாறு பலரும் கோரி உள்ளதாகவும், அதனை அவர் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜனவரி வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார் என்று வதந்திகள் கட்சிக்குள்ளேயே பரவி வருகின்றன. ஆனால், அது ஜனவரி 2021 அல்லது ஜனவரி 2023 அல்லது ஜனவரி 2030 ஆக இருக்குமா என்று கூற முடியாது உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலகுவதற்கு தொடக்கத்தில் அவர் எடுத்த முடிவினை அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வேண்டுகோளுக்குப் பின்னர் மாற்றிக் கொண்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.