அமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார்.

இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார்.

இந்தத் தேர்தலின் வெற்றிக்காக தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வரும் ஜோ பிடன், தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் அவர் கவனம் செலுத்தினார்.

இந் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

65a141df-eff5-4e9b-a7c4-1d107b25cfeb.jpg

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை இதன்மூலம் கமலா ஹரிஸ் பெற்றுள்ளார்.