ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கத்திற்கு இடையில், தற்காலிக விசாவில் அந்நாட்டிலுள்ள சுமார் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் JobKeeper மற்றும் JobSeeker போன்ற உதவித்திட்டங்களிலும் இத்தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர், வேலைக்காக வந்த 470 விண்ணப்பங்களில் இரு விண்ணப்பங்கள் மட்டுமே ஆஸ்திரேலியர்களிடம் இருந்து வந்ததாகக் குறிப்பிடும் அளவிற்கு அங்கு தற்காலிக விசாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை மோசமானதாக இருக்கின்றது. அதாவது சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேலைக்கான விண்ணப்பங்கள் தற்காலிகமாக அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம், கொரோனா கட்டுப்பாடுகளினால் முடங்கிய தொழில் காரணமாக சம்பளத்தை இழந்த Clement Demarais, ஆஸ்திரேலிய தொழிலாளர்களைப் போல எந்த அரசு பலனையும் பெறவில்லை.
ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த திறன்வாய்ந்தவர்களுக்கான ஸ்பான்சர் விசாவில் உள்ள Demarais, அந்நாட்டில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அந்நாட்டிற்கு 10 ஆண்டுகள் வரி செலுத்தி இருக்கிறார், இருந்த போதும் அரசின் JobKeeper, JobSeeker போன்ற உதவித்திட்டங்களில் தவிர்க்கப்பட்டுள்ளார். இவரைப் போல தற்காலிக விசாக்களில் உள்ள 1 மில்லியன்(10 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மெல்பேர்ன் நகரில் பணியாற்றி வந்த Clement Demarais, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சம்பளத்தை இழந்திருக்கும் நிலையில் அவரின் வீட்டு வாடகையை பிரான்சில் உள்ள அவரது குடும்பம் செலுத்தி வருகிறது. “மார்ச் மாத இறுதியிலிருந்து என்னால் எந்த பணத்தையும் சம்பாதிக்க இயலவில்லை,” எனக் கூறியிருக்கிறார் Demarais. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் அளவில் உள்ள நாடுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பல உதவிகளை செய்திருக்கின்றன. இங்கிலாந்தில் JobKeeper போன்ற உதவியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கனடாவிலும் நியூசிலாந்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சில பண உதவிகள் செய்யப்படுகின்றன.
Demarais-யை பொறுத்தமட்டில், அவரால் புதிய ஒரு வேலையை சிட்னி நகரில் பெற முடிந்த போதும் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளின் அங்கு பயணிக்க முடியவில்லை.
பெரும் சிக்கலான சூழ்நிலையில் சிக்கியுள்ள அவர், ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். “எங்களை மறந்து விடாதீர்கள்.”