பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரபல அவுஸ்ரேலியா பேராசிரியர் கூறினார்.
அவுஸ்ரேலியாவின் உயரிய விருது
அவுஸ்ரேலியா தலைநகர் கான்பெர்ரா நகரில் உள்ள அவுஸ்ரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மின்னணு பொருள் பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர், சென்னுப்பட்டி ஜெகதீஸ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் அவுஸ்ரேலியா’ என்னும் உயரிய விருதையும் பெற்றவர் ஆவர்.
புகழ் பெற்ற இந்திய கல்வி நிறுவனங்களான டெல்லி ஐ.ஐ.டி, சென்னை அண்ணாபல்கலைக்கழகம், ஐதராபாத் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சந்தித்து உரையாடுவதற்காக இவர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை வந்த அவரை இந்தியாவுக்கான அவுஸ்ரேலிய தூதரக அதிகாரி ஹரீந்தர்சிங் வரவேற்றார்.
நானோ தொழில்நுட்பம்
பின்னர் ஜெகதீஸ், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் மத்தியில் ‘அடுத்த தலைமுறைக் கான விஞ்ஞான ஆர்வலர்கள்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். நானோ தொழில்நுட்பம் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
சென்னையில் உள்ள அவுஸ்ரேலியாவுக்கான துணைத்தூதர் அலுவலகத்தில் பேராசிரியர் ஜெகதீஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
மருத்துவ துறைக்கு உதவி
உலகம் முழுவதும் நானோ தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளில் முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2020–ம் ஆண்டிலிருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்.இ.டி. விளக்குகள் மூலம் 25 சதவீத கூடுதல் மின் சேமிப்பு, மடிக்கணினிகளை தற்போது இருப்பதை விட இன்னும் தட்டையாக மாற்றுவது, சூரியமின் தகடுகளை வீட்டு ஜன்னல் ஓரம் சுவர்களில் பொருத்தி மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதை 10 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மருத்துவத்துறையில் புற்றுநோயை குணப்படுத்துவதுடன், சேதமடைந்த உடல்உறுப்புகளை வளர வைக்கவும் நானோ தொழில்நுட்பத்தால் முடியும்.
ஆராய்ச்சிக்கு ஊக்கம்
இந்த தொழில்நுட்பத்தை அவுஸ்ரேலியாவும், இந்தியாவும் முழுமையாக அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முன்வரவேண்டும். அமெரிக்காவில் நானோ தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அந்த ஆய்வு முடிவுகள் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தவும் செய்யப்படுகிறது. அவுஸ்ரேலியாவும், இந்தியாவும் போதிய நிதியை ஒதுக்கி நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத்தூதர் ஜான் போனர், தூதரக அலுவலக அதிகாரி செஞ்சு லட்சுமி, மேலாளர் அனுதம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.