ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம்

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை ஆஸ்திரேலிய எல்லைப்படை உறுதிச்செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் இத்தீவில் உள்ள முகாம் திறக்கப்படுவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தடுப்பு

முகாம்களில் உள்ள இட நெருக்கடி பிரச்னையை சமாளிக்க இயலும் என ஆஸ்திரேலிய எல்லைப்படை கருதுகின்றது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எல்லைகள் .மூடப்பட்டிருப்பதாலும் சர்வதேச விமானங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும் தடுப்பில் உள்ள வெளிநாட்டினரை நாடுகடத்துவது .தடைப்பட்டிருப்பதாக எல்லைப்படை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், தடுப்பு முகாம்களில் வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமூக இடைவெளி கட்டுப்பாடு காரணமாக  குறைக்கப்பட்டுள்ளது.

“ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள இட நெருக்கடி அழுத்தத்தை சமாளிக்க, தடுப்பில் உள்ளவர்கள் தற்காலிகமாக கிறிஸ்துமஸ் தீவின் North West Point-ல் உள்ள குடியேற்ற தடுப்புமுகாமிற்கு வரும் வாரங்களில் மாற்றப்படுவார்கள்,” என ஆஸ்திரேலிய எல்லைப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களுக்காக தண்டிக்கப்பட்ட வெளிநாட்டினர்கள் இந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என எல்லைப்படை குறிப்பிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2018ல் ஆஸ்திரேலிய அரசால் மூடப்பட்ட North West Point தடுப்பு மையம், 2019ம்ஆண்டில் திறக்கப்பட்ட போதும் அங்கு எவரும் சிறைவைக்கப்படவில்லை.

கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்பட்ட சமயத்தில், கடந்த பிப்ரவரி மாதம் சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆஸ்திரேலியர்களை தனிமைப்படுத்துவதற்கான இடமாக இந்த முகாம் பயன்படுத்தப்பட்டது.

இப்படியான சூழலில், இம்முகாமை திறப்பதற்கான முயற்சியினை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். பெருந்தொற்று சூழலிற்கு நடுவில் தடுப்பில் உள்ளவர்களை இடம் மாற்றுவது மேலும் சுகாதாரநெருக்கடியை அதிகரிக்கும் என அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.